| 135. | அன்னையே என்னேன் அத்தனே என்னேன் | | அடிகளே யமையுமென் றிருந்தேன் | | என்னையும் ஒருவன் உளனென்று கருதி | | இறைஇறை திருவருள் காட்டார் | | அன்னமாம் பொய்கை சூழ்தரு பாச்சி | | லாச்சிரா மத்துறை அடிகள் | | பின்னையே அடியார்க் கருள்செய்வ தாகில் | | இவரலா தில்லையோ பிரானார். | | 2 |
செய்யுளில் சுட்டுப் பெயரோடு ஒத்து, முன் வந்தது. ‘உவமம்’ என்பது, ‘உவமன்’ என ஈறு திரிந்து, ‘போலி’ என்னும் பொருளதாய் நின்றது. நச்சு - விருப்பம்; அருள். ‘ஆகில்’ என்றதில் அழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. ‘இல்லையோ’ என்னும் ஓகாரம் இரக்கப் பொருளதாய், முறையீடுணர்த்தி நின்றது. இன்னோரன்னவை, "கடிசொல் இல்லைக் காலத்துப் படினே" (தொல் - சொல். 452) என்றதனாற் கொள்ளப்படுவன. இவை, வருகின்ற திருப்பாடல்கள் எல்லாவற்றினும் ஒக்கும். இத் திருப்பதிகத்திற்கு இவ்வாறன்றி, ஓகாரத்தை எதிர்மறையாக்கி, ‘இவர் நமக்கு அருள் செய்யாராயின், இவரையன்றி நமக்குப் பிரானார் பிறர் இல்லையோ’ எனப் பொருள் கூறி, ஏனைத் தலங்களிலுள்ள இறைவரைப் பிறரென்றதாக உரைப்பாரும் உளர். அது, ‘ஊடலுடையார் போல்’ என்னாது, ‘முறைப்பாடுடையார் போல்’ எனக் கருத்துரைத்தும், ‘அருளாதொழியினும்’ என உம்மையை விரித்துக் காட்டியும் (தி. 12 பெரிய புரா. ஏயர்கோன். 80 - 81) உணர்த்திப் போந்த மரபாகாமை யறிக. 2. பொ-ரை: அடியேன் என்னைப் பெற்ற தாயைத் துணை யென்று நினைந்திலேன்; தந்தையைத் துணையென்று நினைந்திலேன்; என்னை ஆண்ட தலைவனே சாலும் என்று நினைத்தேன். இவ்வாறு ஒருவன் உளன்‘ என்று, தம் சீரடியாரை நினைத்தற்கிடையில் அன்னங்கள் மிக்கு வாழும் பொய்கை சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியுள்ள இறைவர் என்னையும் சிறிது திருவுள்ளத்தடைத்து, சிறிது திருவருளைப் புலப்படுத்திலர். இவர்தம் அடியவர்க்கு, மறுமை நலம் ஒன்றையே அளித்தலல்லது, இம்மை நலத்தை அருளுவதில்லையாயினும். இம்மையில் அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ!
|