19. திருநின்றியூர்
பதிக வரலாறு:
சுந்தரர் திருநனிபள்ளி, திருச்செம்பொன்பள்ளி முதலான தலங்களை வணங்கித் திருநின்றியூர் தொழுது பாடியருளிய "திருவும் வண்மையும்" என்னும் திருப்பதிகத்திற்குப் பின்பு அத் தலத்தில் அன்பருடன் அமர்ந்திருந்த நாள்களில் பாடியருளிய தாதல் வேண்டும் இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 150.) குறிப்பு: இத் திருப்பதிகம், இறைவரது பெருமைகள் பலவற்றையும் எடுத்தோதி, அவர் திருநின்றியூரை இடமாகக் கொண்டு எழுந்தருளியிருத்தலை வியந்து அருளிச் செய்தது.
பண்: நட்டராகம் பதிக எண்: 19 திருச்சிற்றம்பலம் 188 | அற்றவ னாரடி யார்தமக் | | காயிழை பங்கினராம் | | பற்றவ னாரெம் பராபரர் என்று | | பலர்விரும்பும் | | கொற்றவ னார்குறு காதவர் | | ஊர்நெடு வெஞ்சரத்தால் | | செற்றவ னார்க்கிட மாவது | | நந்திரு நின்றியூரே.1 |
1. பொ-ரை: பிற பற்றுக்களின்றித் தம் அடியையே பற்றும் அரிய அடியவர்க்குத் தாமும் அவர்க்கு அருளுதலையன்றி வேறு செயலற்றவராய் இருப்பவரும், பெண்ணொரு பாகத்தராகின்ற பற்றினை உடையவரும், ‘எம் இறைவர்’ என்று பலராலும் விரும்பப்படுகின்ற தலைவரும், பகைவருடைய ஊரினை, பெரிய, கொடிய அம்பினால் அழித்தவரும் ஆகிய இறைவருக்கு இடமாய் நிற்பது நமது திருநின்றியூரே. கு-ரை: ‘அற்றவன்’ முதலிய, வினைப்பெயரும் வினைக் குறிப்புப் பெயருமாகிய நான்கும், உயர்வு குறித்த ஆர் விகுதி ஏற்றன. "அடியார் தமக்கு" என்ற நான்காவது, கிழமைப் பொருட்கண் வந்தது. பராபரர் - மேன்மையும் கீழ்மையும் ஆகிய எல்லாமாய் இருப்பவர்,"நம் திருநின்றியூர்" என்றது, தமக்குப் புகழ் பொருளாய் நின்ற உரிமை பற்றி என்க.
|