301. | முட்டாமே நாள்தோறும் நீர்மூழ்கிப் பூப்பறித்து | | மூன்று போதும் | | கட்டார்ந்த இண்டைகொண் டடிசேர்த்தும் அந்தணர்தங் | | கருப்ப றியலூர்க் | | கொட்டாட்டுப் பாட்டாகி நின்றானைக் குழகனைக் | | கொகுடிக் கோயில் | | எட்டான மூர்த்தியை நினைந்தபோ தவர்நமக் | | கினிய வாறே. | | 3 |
உருபு புணர்க்கப்பட்டதாயினும், கருத்து வகையால், 'காற்றுத் தீ கதிர் மதியானை' எனத் தொகைச்சொல்லாய் நிற்றலின், அவை ஒருசொல் தன்மையவாய், "தோன்றும்" என்னும் எச்சத்திற்கு முடிபாயின. "தோன்றும்" என்றதற்கும், "உதைத்து" என்றதற்கும் கருத்து நோக்கி, இவ்வாறு உரைக்கப்பட்டது. எண்ணின்கண் வந்த, 'உதைத்து' என்னும் எச்சம், 'ஏற்றான்' என்னும் வினைப்பெயர் கொண்டது. உம்மை, சிறப்பு. இத் திருப் பாடலுள் நீறணிந்து வழிபடுதல் சிறந்தெடுத்து அருளப்பட்டது. 3. பொ-ரை: நாள்தோறும், 'காலை, நண்பகல், மாலை' என்னும் மூன்று பொழுதுகளிலும், தப்பாமல் நீரின்கண் மூழ்கிப் பூக்களைப் பறித்து, அவைகளை, கட்டுதல் பொருந்திய இண்டை மாலையாகச் செய்துகொண்டு, மனத்தைத் தனது திருவடிக்கண் சேர்த்துகின்ற அந்தணர்களது திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலில், முழவம் முதலியவற்றின் கொட்டும், அவற்றிற்கேற்ற கூத்தும், பாட்டும் ஆகியவற்றை விரும்பி இருக்கின்ற அழகனும், எட்டுருவாயவனும் ஆகிய இறைவனை நாம் மனத்தினால் நினைந்தபோது, அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது. கு-ரை: "இண்டை" என்பதன்பின் 'ஆக்கி' என்பது வருவிக்க. இண்டை, முடியிலணிவதாகலின், அடிசேர்த்தப்படுவது மனமாயிற்று. இனி, 'அடியுறையாக வைத்து' எனலுமாம். 'அடிசேரும்' எனப் பாடம் ஓதுதல் சிறக்கும், "பாட்டு" என்பதன்பின், தொகுக்கப்பட்ட நான்காவது விரிக்க. "கோயில்" என்றதில், ஏழாவது இறுதிக்கண் தொக்கது. 'கருப்பறியலூர்க் கொகுடிக் கோயிலின்கண் நின்றானை' எனக் கூட்டுக. "மனத்தினால்" என்றது வேண்டும் இடங்களிலும் வந்து இயையும். எட்டுரு, அட்ட மூர்த்தம். இத் திருப்பாடலுள் பூமாலையால் வழிபடுதல் சிறந்தெடுத்து அருளப்பட்டது.
|