பக்கம் எண் :

747
 
391.திருந்தாத வாளவுணர் புரமூன்றும் வேவச்

சிலைவளைவித் தொருகணையால் தொழில்பூண்ட சிவனைக்

கருந்தாள மதக்களிற்றி னுரியானைப் பெரிய

கண்மூன்றும் உடையானைக் கருதாத அரக்கன்

பெருந்தோள்கள் நாலைந்தும் ஈரைந்து முடியும்

உடையானைப் பேவுருவ மூன்றுமுற மலைமேல்

இருந்தானை எறிகெடில வடவீரட் டானத்

துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

9



''மேல்'' என்பதன்பின், 'நின்ற' என்றது வருவிக்க. பாண்டியன் சிவனடியை முடிக்கொண்டவனாயின பின்னர்ப் பாண்டிநாடு முழுதும் திருநீற்றொளியில் விளங்கினமை தோன்ற, ''தென்னானை'' என்றும் அருளினார். 'தென்னவன்' எனினும், 'தென்னான்' எனினும் ஒக்கும். இப்பகுதி, 'சிவபிரான் பாண்டியநாட்டில் அரசனாய் இருந்து ஆண்டான்' என்னும் வரலாற்றைக் குறிப்பதாகக் கொண்டு, அத்கேற்ப உரைப்பாரும் உளர்.

9. பொ-ரை: வில்லை வளைத்து எய்த ஓர் அம்பினாலே, பகைமை கொண்ட கொடிய அசுரர்களது ஊர்கள் மூன்றும் வெந்தொழியுமாறு போர்த்தொழிலை மேற்கொண்ட சிவபெருமானும், பெரிய கால்களையுடைய மதம் பொருந்திய யானையின் தோலைப் போர்த்தவனும், பெரிய மூன்று கண்களையும் உடையவனும், தன்னை மதியாத அரக்கனாகிய, இருபது பெரிய தோள்களையும், பத்துத் தலைகளையும் உடைய இராவணனது அச்சந்தரும் உருவத்தை ஊன்றிய, கயிலாய மலையின்மேல் நீங்காது இருப்பவனும், அலையெறியும் கெடில நதியின் வடபால் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆகிய இறைவனை அவன் தனது திருவடியை என் முடிமேல் சூட்டவந்த சிறிதுபொழுதினும், யான், அறியாது, இகழ்வேனாயினேன் போலும்; என்னே என் மடமை இருந்தவாறு! இனியொருகாலும் அது வாயாது போலும்!

கு-ரை: பகைவரை, 'திருந்தாதார்' என்பவாகலின், திருந்தாமை, பகைமை கொள்ளுதலாயிற்று. ''வளைவித்து'' என்புழி, 'எய்த' என்பது எஞ்சி நின்றது. ''பெரியகண்'' என்றது, 'உலகிற்கு விளக்கந்தரும் கண்' என்றவாறு. அதனைச் செய்கின்ற சுடர்கள் மூன்றென்பது அறியப்பட்டதாகலின், ''மூன்றும்'' என முற்றும்மை பெற்றது. ''இராவணனை உருவம் ஊன்றும்'' என்றது, 'நூலைக் குற்றங்