பக்கம் எண் :

746
 
390.பொன்னானை மயிலூர்தி முருகவேள் தாதை

பொடியாடு திருமேனி நெடுமாறன் முடிமேல்

தென்னானைக் குடபாலின் வடபாலின் குணபாற்

சேராத சிந்தையான் செக்கர்வான் அந்தி

அன்னானை அமரர்கள்தம் பெருமானைக் கருமான்

உரியானை அதிகைமா நகருள்வாழ் பவனை

என்னானை எறிகெடில வடவீரட் டானத்

துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

8



8. பொ-ரை: 'அழகிய யானை முகத்தையுடைய விநாயகனும், மயிலூர்தியை உடைய முருக வேளும்' என்னும் இவர்க்குத் தந்தையும், ஞானசம்பந்தரால் திருநீற்றில் மூழ்கிய திருமேனியையும், 'மேற்கு, வடக்கு, கிழக்கு' என்னும் திசைகளில் உள்ள பிற நாடுகளின் மேற் செல்லும் மண்ணாசை யற்ற மனத்தையும் உடையவனாய்ச் சிறப்பெய்திய நெடுமாறனது முடியின்மேல் நின்ற தென்னாட்டவனும், அந்திச் செவ்வானம் போலும் நிறத்தை உடையவனும், தேவர்களுக்குத் தலைவனும், யானைத் தோலைப் பேர்த்தவனும், திருவதிகை மாநகரில் வாழ்பவனும், எனக்கு உரியவனும், அலையெறியும் கெடில நதியின் வடபால் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளி யிருப்பவனும் ஆகிய இறைவனை, அவன் தனது திருவடியை என் தலைமேற் சூட்ட வந்த சிறிது பொழுதினும் யான், அறியாது இகழ் வேனாயினேன் போலும்; என்னே என் மடமை இருந்தவாறு! இனி யொருகாலும் அது வாயாது போலும்!

கு-ரை: முதன்மை உறுப்பாய தலை யானையாயினமைபற்றி, விநாயகரை, 'யானை' என்பர். 'ஞானசம்பந்தரால்' என்பது வரலாற்றாற் கொள்ளக்கிடந்தது. திருநீற்றைப் பெற்ற பின்பு திருவருள் ஒளியில் மூழ்கினமை தோன்ற, 'திருமேனி' என்று அருளினார். மேனிச் சிந்தையான் நெடுமாறன் முடிமேல் தென்னானை எனக்கூட்டுக. ஞானசம்பந்தரால் பாண்டியனை உய்வித்து, அந்நாட்டில் தான் விளங்கி நின்ற அருட்செயலை எடுத்தோதியருளியவாறு. நெடுமாறன் ஆளுடைய பிள்ளையாரது அருள்பெற்ற பின்னர், சிவபிரானது திருவடியைத் தன்முடிமேற்கொண்டு ஒழுகினானாதலின் அப்பெருமானை, அவன் முடிமேல் நின்றவனாக அருளினார். 'இறைவன் தன் திருவடியை நேரே வையாது, ஞானசம்பந்தர் வாயிலாகத் தன் முடி மேல் வைத்தமையைப் பாண்டியன் போற்றி நின்றான்; யானோ, இறைவன் நேரே வந்து தன் திருவடியை என் முடிமேல் வைத்தமையை இகழ்ந்தேன்' என நினைந்து இரங்கி, இவ்வாறருளிச் செய்தார் என்க.