பக்கம் எண் :

753
 

அவர் தம்மை ''பேய்'' என்றே குறித்தமை யானும், 'பேய்' எனின், இனிது விளங்காமை பற்றி அவர் ஒருவரையே ''பேயார்'' என்று பன்மையாற் குறித்தருளினார்.

இவ்வாறாகலின், ''பொய்யடிமையில்லாத புலவர்க்கும் அடியேன்'' என்பதில் உள்ள, 'புலவர்' என்பதைப் பொருட்பன்மை யாகக் கொள்ளாது, உயர்வுப் பன்மையாக வைத்து, அது திருவாத வூரடிகளைக் குறித்தது என உரைத்து, நம்பியாண்டார் நம்பிகள் முதலிய பிற்காலத்தார் அதனை அறியாது போயினாரென, பேரருட் பெருஞ்செல்வராய் அறிவே வடிவமாய் நின்ற அருளாசிரியர்க்கெல்லாம் ஓர் அறியாமை ஏற்றிப் பெருங் குற்றத்தில் வீழ்ந்து உரைப்பார் உரைப்பனவெல்லாம் பொருந்தாமை அறிந்துகொள்க. இதனானே, சிலவிடங்களில் நாயன்மாரது பெயர்களைப் பன்மையாக ஓதும் பாடங்கள், பாடத்தினை நன்கு போற்றாது, தாம் வேண்டி யவாறே ஓதுவனவென்பதும் பெறப்பட்டது. இதனை யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்கள் கொண்ட உண்மைப் பாடம் நோக்கி அறிந்து கொள்க.

அற்றேல், ஆசிரியன்மாருள் ஒருவராம் பேரடியாராகிய ஆளுடைய அடிகளை நம்பியாரூரர் தம் திருத்தொண்டத்தொகையுள் எடுத்தோதியருளாமை என்னையோ எனின், 'அவர் நம்பியா ரூரர்க்குக் காலத்தாற் பிற்பட்டவராகலின், ஓதிற்றிலர்' என்பர் ஒருசாரார்; அது பொருந்தாமையை ஈண்டுக் காட்டப்புகின், விரியும்; இடம்பெறின், எங்கேனும் காட்டுவேன். அது நிற்க. 'பத்திமார்க்கத்தில் நின்றாரையே ஆளுடைய நம்பிகள் அருளிச்செய்யப் புகுந்தார்; வாத வூரடிகள் விதிமார்க்கத்தில் நின்றவராகலின், அவரை ஓதிற்றிலர்' என விடுப்பர் மற்றொரு சாரார். திருத்தொண்டத்தொகையுள் ஓதப்பட்ட அடியார்களுள் முருகர், சிறப்புலியார் முதலாக, விதிமார்க்க்கத்தில் நின்றவரும் சிலர் உளராதலின், அதுவும் விடையாமாறில்லை. இறைவன் திருவருள்வழி அஞ்ஞான்று வெளிப்பட்ட திருத்தொண்டத் தொகையுள் ஆளுடைய அடிகள் சொல்லப்படாமைக்கு யாம் இஞ்ஞான்று. 'இதுவே காரணம்' என்று ஒன்றனை அறுதியிட்டுக் காட்டுதல் அரிது. இது, தேவாரத் திருமுறையுள் அலகிலா ஏடு பழுதாகக் கண்டு வருந்திய சோழுனுக்கு இறைவன், 'ஈண்டு வேண்டுவன வைத்தோம்' என்று அருளியதில், வேண்டுவனவாய திருப்பதிகங்கள் மிகச் சிலவே யாயினமைக்கு நாம் காரணங் காட்டுதல் அரிதாய் நிற்றல் போல்வதாம்.

அது நிற்க, உலகம் தோன்றிய நாள்தொட்டு நம்பியாரூரர் திருத்தொண்டத்தொகை அருளிச்செய்யுங்காறும் சிவனடியாராய் நின்றவர் அறுபத்திருவரே என்றல் கூடாமையின், அவர் அறுபத் திரு வரையே எடுத்தோதியது என்னை என்னும் வினாவை நாம் யாதானும் ஓராற்றால்