விடுத்தலே வேண்டும். அதனை நோக்குங்கால், 'திருத் தொண்டத்தொகை, சிவனடியார்களது பெருமையை அவர்கள் பால் நிகழ்ந்த உண்மை நிகழ்ச்சிகள் வாயிலாக விளக்குதலைக் கருதி எழுந்தது' என்றும், அதனால் உண்மை வரலாறுகள் அறியப்பட்ட அடியார்களே அதன்கண் எடுத்தோதப்பட, ஏனையோர் பலரும், அப்பாலும் அடிச்சார்ந்தாராக அடக்கப்பட்டனர்' என்றும், 'ஆளுடைய அடிகளது வரலாறு, திருவள்ளுவர் முதலியோரது வரலாறு போலப் பழைமையுட் பட்டு மறைந்தமையின் அதனை நம்பியாரூரர் குறித்திலர் என்றும் அஃது அன்னதாயினும், பிற்காலத்தார் அதனைத் தாம் தாம் அறிந்த வாறு கூறிப்போந்தார்' என்றும் கொள்ளுதலே பொருந்துவது போலும்! காலம், இடம் முதலியவற்றிக்கு ஏற்பவே இறைவன் தனது திருவருளை வைப்பனாகலின். 'அவன் அருளானே தோன்றிய திருத் தொண்டர் வரலாற்றுள் சில அறியப்படாவாயினமை என்னை' என்பது வினாவாகாது என்க. பண்: கொல்லிக்கௌவாணம் பதிக எண்: 39 திருச்சிற்றம்பலம் 393. | தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் | | திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் | | இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் | | இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் | | வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் | | விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன் | | அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் | | ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. | | 1 |
1. கு-ரை: தில்லைவாழந்தணர், தொகையடியார்; இம்முதலடி திருவாரூர் இறைவன் எடுத்துக் கொடுத்தருளியதாதலைப் பெரிய புராணத்தால் அறிக. நாயன்மாரது பெயர்களிற் பெரும்பாலன அவர்களது தொண்டு பற்றி வந்த சிறப்புப் பெயரே என்க. 'திருநீலகண்டர்' என்னும் பெயருடைய நாயன்மார் இருவர் உண்மையின், அவர்களை, 'குயவனார், பாணனார்' என, சாதிப் பெயர்களால் பிரித்தோதியருளினார். இங்ஙனம் சாதிமுதலிய சிறப்புப் பற்றி வரும் பெயர்கட்குப் பின்னர், 'ஆர்' என்பதனைச் சேர்த்து உயர்வுப் பன்மை கூறுதல் பிற்கால வழக்கு. ஆசிரியர் தொல்காப்பியனார்
|