யாளரைப் பாடிப் பொழுதைக் கழிக்காமல் இம்மையே இன்பம் தரும் இமயத் தலைவனை நாடுங்கள் - பாடுங்கள் என்று நமக்குத் தெரிவிக்கிறார். இறைவனும் இயற்கையும்: 'இறைகளோடியைந்த இன்பம் இன்பத்தோடியைந்த வாழ்வு' (தி. 7 ப. 8 பா. 1) என்ற ஆரூரர் வாக்கு அமுதவாக்கே! புலவர்கள் கைபுனைந்தியற்றாக் கவின் பெருவனப்பில் ஈடுபட்டுத் தம்மை மறந்து செந்தமிழ்க் கவிதைகளைப் புனைந்திருக்கிறார்கள். நமக்கு மிகச் சாதாரணமாகத் தோன்றும் காட்சிகளெல்லாம் புலவர்களின் நாநயத்தோடு சேரும் போது அதியற்புத அழகோடு மலர்ந்து மணம் வீசுகின்றன. புராண இலக்கிய ஆசிரியர்கள் இவ்வியற்கையில் கொண்ட தோய்வை அவர்கள் தந்த இன்தமிழ்ப் பாடல்களே பறைசாற்றும் திருவிளையாடல் புராணத்தில் ஆசிரியர் பரஞ்சோதியார் வேனில் அரசன் வீற்றிருக்கும் காட்சியைச் சித்தரிக்கிறார். தாமரைக் களாஞ்சி தாங்க தண்குயில் முழவமேங்க மாமரு தமருங்கிள்ளை மங்கலம் முழங்க தும்பி காமரம் இசைப்ப முள்வாய்க் கைதை வாளெடுப்ப வேனிற் கோமகன் மகுடஞ்சூடி இருப்பதக் குளிர்பூஞ் சோலை. -திருவிளை. புரா. தருமிப். 20 இயற்கைப் பொருள்களினூடே இறைவனையும் காணும் மாண்பு நந்தமிழ்ப் புலவர்பால் அமைந்த தனிச் சிறப்பு. 'நோக்குவ எல்லாம் அவையே போறல்' என்பது அகத்துறையில் வருமோர வத்தை. சித்தத்தைச் சிவன்பாலே வைத்து அப்பாலும் அவனடி சார்ந்தாருக்கும் நோக்கும் காட்சிகளிலெல்லாம் சிவம் - சக்தியின் ஒளியே பிரதிபலிக்கும். அந்தக் கவினுறு காட்சியைத் திருவையாற்றில் கண்ட அப்பர் பெருமான், பின்வருமாறு பாடுகிறார். மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடுபடாமல் ஐயாறடை கின்ற போது காதன் மடப்பிடி யோடும் களிறு வருவன கண்டேன் கண்டேன் அவர்திருப் பாதம் கண்டறியாதன கண்டேன். (தி. 4 ப. 3 பா. 1)
|