பக்கம் எண் :

780
 
427.

வரைமான்அனை யார்மயிற் சாயல்நல்லார்

வடிவேற்கண்நல் லார்பலர் வந்திறைஞ்சத்

திரையார்புன லுட்பெய்து கொண்டுமண்டித்

திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்

நிரையார்கமு குந்நெடுந் தாட்டெங்குங்

குறுந்தாட்பல வும்விர விக்குளிரும்

விரையார்பொழில் சூழ்வெஞ்ச மாக்கூடல்

விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

3


428.

பண்ணேர்மொழி யாளையொர் பங்குடையாய்

படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய்

தண்ணார்அகி லுந்நல சாமரையும்

அலைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்

மண்ணார்முழ வுங்குழ லும்மியம்ப

மடவார்நட மாடு மணியரங்கில்

விண்ணார்மதி தோய்வெஞ்ச மாக்கூடல்

விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

4



3. பொ-ரை: மலையில் உள்ள மான்போல்பவரும், மயில் போலும் சாயலை யுடையவரும், கூரிய வேல்போலும் கண்களை யுடையவரும் ஆகிய மகளிர் பலர் வந்து வழிபட, அவர்கள் தனக்கு அளித்த பொருளை, அலை நிறைந்த நீரில் இட்டுக்கொண்டு, கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள. வரிசையாகப் பொருந்திய கமுக மரங்களும், நீண்ட அடியினையுடைய தென்னை மரங்களும், குறிய அடியினையுடைய பலா மரங்களும் ஒன்றாய்ப் பொருந்துதலால் குளிர்ச்சியை அடைகின்ற, மணம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற, வேறுபட்ட இயல்பினையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.

கு-ரை: ''மானனையார்'' முதலிய பலவும் வேறு வேறுள்ளாரைக் குறித்தனவல்ல; அனைவரையும் குறித்தனவேயாம். ''இறைஞ்ச'' என்றதனால், திரையார் புனலுட் பெய்துகொள்வது அப்பொருளாயிற்று. அதனைக் குறிக்கும் சொல் சொல்லெச்சமாய் நின்றது.

4. பொ-ரை: பண்போலும் மொழியினையுடைய உமாதேவியை ஒருபாகத்தில் உடையவனே, யாவரும் ஒடுங்குங் காட்டினிடத்தில்