பக்கம் எண் :

779
 
426.

குளங்கள்பல வுங்குழி யுந்நிறையக்

குடமாமணி சந்தன மும்மகிலும்

துளங்கும்புன லுட்பெய்து கொண்டுமண்டித்

திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்

வளங்கொள்மதில் மாளிகை கோபுரமும்

மணிமண்டப மும்மிவை மஞ்சுதன்னுள்

விளங்கும்மதி தோய்வெஞ்ச மாக்கூடல்

விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

2



நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள, 'தளிர்த்த தழைகளையுடைய மாமரம், வளைந்த புன்னை மரம், குங்கும மரம், குருக்கத்திப்பந்தர்' என்னும் இவைகளின்மேல் குயில்கள் இருந்து கூவுதல் ஒழியாத, அஞ்சுகின்ற கலைமானையுடைய திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற, வேறுபட்ட இயல்பை உடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.

கு-ரை: ''பெயதுகொண்டு'' என்றது முதலியன, செய்யாததனைச் செய்வதுபோல அருளியன. 'சிற்றாறு' என்பது, பெயர். அது வடக்காக ஓடுதலின், இத்தலம் அதன் கீழ்க்கரையில் உளதென்க. குயில் கூவுதலும் மான் அஞ்சுதற்குக் காரணமாகும். வேறுபடுதல், உலகியலினின்றும். இல்வாழ்க்கையின் நீங்கி, இறைவன் தொண்டே செய்வார் சீரடியார் என்க.

2. பொ-ரை: பல குளங்களும், பல குழிகளும் நிறையும்படி, மேற்குத் திசையில் உள்ள சிறந்த மணிகளையும், 'சந்தனமரம், அகில்மரம்' என்னும் இவற்றையும், அசைகின்ற நீருள் இட்டுக்கொண்டு, கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரை மேல் உள்ள, வளத்தைக்கொண்ட மதிலும், மாளிகையும் கோபுரமும், மணிமண்டபமும் ஆகிய இவை. மேகத்தில் விளங்குகின்ற சந்திரனை அளாவுகின்ற திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பை உடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.

கு-ரை: ''இவை என்றதும், மதிதோய்'' என்றதும், ''வாளைமீன் உள்ளல் தலைப்படல்'' (திரிகடுகம்-7.) என்புழிப் போல, ஒவ்வொன்றும் வினைமுதலும், செய்யப்படுபொருளுமாய்த் தடுமாறின.