442. | அந்தி திரிந்தடி யாரும்நீரும் அகந்தொறும் சந்திகள் தோறும் பலிக்குச் செல்வது தக்கதே மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம் முந்தி அடிதொழ நின்ற சீர்முது குன்றரே. | | 8 |
443. | செட்டிநின் காதலி ஊர்கள் தோறும் அறஞ்செய அட்டுமின் சில்பலிக் கென்ற கங்கடை நிற்பதே பட்டிவெள் ளேறுகந் தேறு வீர்பரி சென்கொலோ முட்டி அடிதொழ நின்ற சீர்முது குன்றரே. | | 9 |
8. பொ-ரை: பெண் குரங்கிற்கும், ஆண் குரங்கிற்கும் உண்ணுதற்குரிய பழங்களை அவைகள் தேடிக்கொண்டு மலைப்புறங்களில் முற்பட்டுச் சென்றபொழுது அவைகள் கண்டு, அன்புகொண்டு வணங்குமாறு நின்றருளுகின்ற, புகழையுடைய திருமுதுகுன்றத்து இறைவரே, நீரும் அடியாருமாக இல்லந்தோறும், அந்தியிலும், சந்தியிலும் பிச்சைக்குச் சென்று திரிவது தக்கதோ? கு-ரை: ''மந்தி கடுவன்' என்ற உம்மைத்தொகை, ஈற்றில் உருபேற்றது. அந்தியை முன்னர்க் கூறினமையால், ''சந்தி'' என்றது, காலையும், நண்பகலும் என்க. 9. பொ-ரை: யாவரும் எதிர்வந்து அடிவணங்க நிற்கின்ற, புகழையுடைய திருமுதுகுன்றத்து இறைவரே, அளவறிந்து வாழ்பவளாகிய உம் மனைவி ஊர்கள்தோறும், அறம் வளர்க்க, நீர், இல்லங்களின் வாயில் தோறும் சென்று 'இடுமின்' என்று இரந்து, சிலவாகிய பிச்சைக்கு நிற்றல் பொருந்துமோ? கட்டுள் நில்லாத வெள்ளிய எருது ஒன்றை விரும்பி ஏறுவீராகிய உமது தன்மைதான் என்னோ? கு-ரை: செட்டு - அளவறிந்து வாழ்தல். 'அட்டுமின் என்று சில் பலிக்கு நிற்பதே' எனக் கூட்டுக. 'அகத்துக்கண் கடையிடத்து' என்க. 'ஏறுவீர்' முன்னிலை வினைப்பெயர். ''வரையா நாளிடை வந்தோன் முட்டினும்'' (தொ. பொருள் 110) என்புழிப்போல, முட்டுதல், 'எதிர்ப்படுதல்' என்னும் பொருளைத் தந்தது.
|