440. | இழைவளர் நுண்ணிடை மங்கை யோடிடு காட்டிடைக் குழைவளர் காதுகள் மோத நின்று குனிப்பதே மழைவள ருந்நெடுங் கோட்டி டைமத யானைகள் முழைவள ராளி முழக்க றாமுது குன்றரே. | | 6 |
441. | சென்றி லிடைச்செடி நாய்கு ரைக்கச் சேடிச்சிகள் மன்றி லிடைப்பலி தேரப் போவது வாழக்கையே குன்றி லிடைக்களி றாளி கொள்ளக் குறத்திகள் முன்றி லிடைப்பிடி கன்றி டும்முது குன்றரே. | | 7 |
6. பொ-ரை: மேகங்கள் மிகுந்த நீண்ட சிகரங்களிடையே மதத்தையுடைய யானைகளும், குகைகளில் வளர்கின்ற யாளிகளும் முழங்குதல் நீங்காத திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, நீர், நூல் தங்கியுள்ளதுபோலும், நுட்பமான இடையினையுடைய மங்கையோடு இடுகாட்டின்கண், குழை பொருந்திய காதுகள் பக்கங்களில் மோதும்படி முற்பட்டு நின்று நடனமாடுவதோ? கு-ரை: ''அதனை யாங்கள் நின்று காண்பதோ? நல்லரங்கி் நின்று ஆடுதல் வேண்டும்' என்றவாறு. தமக்கு ஆவது வேண்டுவார், தம் தலைவர்க்கு ஆவதும் வேண்டினார் என்க. 7. பொ-ரை: குன்றில் களிற்றியானையைச் சிங்கம் உண்டுவிட, அதன் பிடியானையையும், கன்றையும் குறத்திகள் தங்கள் குடிலின் முன் கட்டிவைத்துக் காக்கின்ற திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, நீர், பல இல்லங்களிலும் சென்று, அங்குள்ள இழிந்த நாய்கள் குரைக்க, தொழுத்திகள் தெருவில் வந்து இடுகின்ற அந்தப் பிச்சையை வாங்கச் செல்வது, மேற்கொள்ளத் தக்க வாழக்கையோ? கு-ரை: 'சேடியர்' என்பதனை, ''சேடிச்சிகள்'' என்றார்; எனவே, இது, 'வேடிச்சி, செட்டிச்சி' என்றாற்போல, இச்சு இடைநிலை பெற்றதென்று கொள்ளப்படும். அப்பலி எனப்பிரித்து, எதுகை நோக்கி அகரம் ஐகாரமாயிற்று என்க. ஐ - அழகு என்று கொண்டு, நகையை உள்ளுறுத்துக் கூறிற்றாக உரைத்தலுமாம். 'குன்றினிடை' என்பதில், சாரியை திரிந்துநின்றது.
|