பக்கம் எண் :

788
 
438.இளைப்பறி யீரிம்மை யேத்து வார்க்கம்மை செய்வதென்
விளைப்பறி யாதவெங் கால னையுயிர் வீட்டினீர்
அளைப்பிரி யாவர வல்கு லாளொடு கங்கைசேர்
முளைப்பிறைச் சென்னிச் சடைமு டிமுது குன்றரே.

4


439.ஆடி யசைந்தடி யாரும் நீரும் அகந்தொறும்
பாடிப் படைத்த பொருளெ லாமுமை யாளுக்கோ
மாட மதிலணி கோபு ரம்மணி மண்டபம்
மூடி முகில்தவழ் சோலை சூழ்முது குன்றரே.

5



குறித்தவாறு. 'வாளி, வில்லி' என்னும் இகர ஈற்று ஒருமைப்பெயர்கள், பன்மையுணர்த்தும் கள் விகுதிபெற்றன. அவர்கள் புறத்து நின்று காத்தல், கொடியவர்கள் வேள்வியை அழித்தல் செய்யாதபடி என்க.

4. பொ-ரை: தன் செயல் விளைப்பதறியாது வந்த கொடிய இயமனை உயிர்போக்கியவரே, புற்றினின்றும் நீங்காத பாம்பின் படம் போலும் அல்குலையுடைய உமையோடு கங்கையும் பொருந்திய, இளைய பிறையையுடைய, தலைக்கண் உள்ள சடைமுடியையுடைய, திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே. இப்பிறப்பில் உம்மைப் போற்றுகின்றவர்களது தளர்ச்சியை நினைக்கமாட்டீர்; வரும் பிறப்பில் நீர் அவர்கட்குச் செய்வது என்ன இருக்கின்றது?

கு-ரை: 'செய்வது என் ளது' என்றது, இப்பொழுது இன்றிப் பின் வருவது பெரிதாயினும், அது நோக்கி, இப்பொழுது உள்ள துன்பத்தைப் பொறுத்து வாழார்; ஆதலின், இப்பொழுதே அருள் செய்தல் வேண்டும் என்றபடி. ''என்'' என்றதன்பின், 'உளது' என்பது தொகுத்தலாயிற்று.

5. பொ-ரை: மாடங்கள்மேலும், மதில்மேலும், அழகிய கோபுரங்கள் மேலும், மணிமண்டபங்கள்மேலும், மேகங்கள் மூடிக்கொண்டு தவழ்கின்ற, சோலை சூழ்ந்த திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, அடியாரும் நீருமாகச் சென்று இல்லந்தோறும் ஆடியும், பாடியும் வருந்திச் சேர்த்த பொருள்களெல்லாம், உம் தேவிக்கு மட்டில்தான் உரியனவோ? எம்போல்வார்க்குச் சிறிதும் உரியது இல்லையோ ?

கு-ரை: 'அடியவர்களும் கூடித் தேடிய பொருள்தானே; எங்கட்குச் சிறிதும் கொடுக்க இசைகின்றிலிரே' என்றபடி, அசைதல் - தளர்தல்; வருந்துதல். ''சோலைசூழ்'' என்றதும், அதன்மேலும் முகில் தவழும் என்னும் குறிப்பினது.