பக்கம் எண் :

792
 

44. பொது

(முடிப்பதுகங்கை)

பதிக வரலாறு:

சேரர் பெருமானுடன் சுந்தரர், ஐயாற்றிறைவரைத் தொழுது பல தலங்களையும் வணங்கிக்கொண்டு கொங்கு நாட்டைக் கடந்து மலைநாடு சென்று சேரமான் பெருமாளது தலைநகரமாகிய கொடுங்கோளூரை யடைந்து அவருடன் திருவஞ்சைக்களத்திறைவரை வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 பெரிய புரா. கழறிற். புரா. 146)

குறிப்பு: இத்திருப்பதிகம், தொடக்கத்தாற் பெயர்பெற்றது. பொதுவாக அருளிச்செய்யப்பெற்றதாயினும், திருவஞ்சைக்களத்துப் பெருமான் திருமுன்பில் அருளிச்செய்தது என்பதனை, இதன் வரலாற்றால் உணர்க. இது, சிவபிரானது தன்மையை ஆராயும் முறையில் அருளிச் செய்தது. ஓகாரங்கள், தெரிநிலை. இனிச் சிறப்பாகக்கொண்டு, 'இவை எம்பெருமானது இயல்புகள்' என இசையெச்சம் வருவித்துரைத்தலுமாம்.

பண்: கொல்லிக்கௌவாணம்

பதிக எண்: 44

திருச்சிற்றம்பலம்

446.முடிப்பது கங்கையுந் திங்களுஞ்

செற்றது மூவெயில்

நொடிப்பது மாத்திரை நீறெ

ழக்கணை நூறினார்

கடிப்பதும் ஏறுமென் றஞ்சு

வன்திருக் கைகளால்

பிடிப்பது பாம்பன்றி இல்லை

யோஎம் பிரானுக்கே.

1



 1. பொ-ரை: எம் பெருமான் தலையிற் சூடுவது கங்கையையும் சந்திரனையும், அழித்தது மூன்று மதில்களை, அவற்றைக் கை நொடிக்கும் அளவில் சாம்பலாய்த் தோன்றுமாறு அம்பினால் அழித்தார். தனது வலிய திருக்கைகளால் பிடிப்பது பாம்பு. அது கடித்தவுடன், நஞ்சு தலைக்கேறும் என்று யான் எப்பொழுதும் அஞ்சுவேன்; இவை தவிர எம்பெருமானுக்கு வேறு பொருள்கள் இல்லையோ!