பக்கம் எண் :

8
 

பேயாய்த் திரிந்தெய்த்தேன் :

பிரமன், படைத்தல் தொழிலைச் செய்ய அறியாமல் அழுதான். அழுத அக்கண்ணீரில் உதித்த தேவ வகுப்பினரே பேய்கள். பேய்கட்கு உருவமில்லை. அவை ஆசாரம் இல்லாதவர்கள், மனோதிடம் இல்லாதவர்களைப் பற்றி, அவர்கள் உடலையே இருப்பிடமாகக் கொள்ளும் தன்மையுடையன. நீறிடார், அரனை நினைந்திடார், ஐந்தெழுத்தை நினையாதார், சிவபூசை புரியாதார், முதலிய இறைநெறி கடைப்பிடியாதவர் உண்ட உணவே பேய்கள் உண்ணும் உணவாகும். அகால மரணம் அடைந்தோர், காலம் வருந்துணையும் உடலின்றி ஆகாயத்தில் உலவி வருவனவே பேய்கள் என்பர். கடவுள் உணர்வின்றித் திரிபவர்களும் பேய்க் கணத்தில் சேர்க்கத் தக்கவரே. இதனைத்தான் சுந்தரர், "நாயேன் பலநாளும் மனத்துன்னை நினைப்பின்றிப் பேயாய்த் திரிந்தெய்த்தேன், உன்னை நினைந்தமையால் பெறலாகா அருள்பெற்றேன்" என்று நெகிழ்வும் பெருமகிழ்வும் கொள்கிறார். கடவுள் உணர்வின்றித் திரிவோரைத் திருவள்ளுவரும்,

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும் குறள் 850

என்று கூறியுள்ளமை இங்கு நினைவுகூரத் தக்கது. அலகை-பேய். திருஞானசம்பந்தரும் இறை உணர்வும் ஆசாரமும் வழிபாடும் இல்லாதவர்களைப் பேய்களாகவே குறிப்பிடுகின்றார், திருவெண்ணியூர்ப் பதிகம் நான்காம் பாடலில். அப்பாடல் வருமாறு.

மூத்தானை மூவுலகுக்கொரு மூர்த்தியாய்க்
காத்தானைக் கனிந்தவரைக் கலந்தாளாக
ஆர்த்தானை அழகமர் வெண்ணி அம்மான்தன்னை
ஏத்தாதார் என்செய்வார், ஏழைஅப் பேய்களே.

-தி. 2 ப. 14 பா. 4

தொழுவார் துயர் தீர்த்தலே தொழில் :

இறை நம்பிக்கையும் இறைவழிபாடும் செய்பவர்கள் என்றும் துன்புறார். வினை வழியே துன்பம் வரினும் அது பார்ப்பவர்க்குத் துன்பமாகத் தெரியுமே தவிர வழிபடும் நியமமுடையார்க்குத் துன்பமாகத் தெரியாது. இதைத்தான் உடல் ஊழாய்க் கழியும் என்பர். தொழுபவர்களின் துயர்களைப் பெருமானே ஏற்று வழிபடும் அன்பர்கட்கு இடர் ஏதுமின்றிக் காப்பாற்றுகின்றார். இதைத்தான் சுந்தரர் "தொழுவாரவர் துயராயின தீர்த்தல் உன்தொழிலே" என