பக்கம் எண் :

7
 

பேசியவர் இப்போது எப்படி "ஆள் அல்லேன்" எனலாமோ என்கிறார் என்றால், பெருமானே நீ என்னை இதுவரை பொதுவாக நினைத்தாயே தவிர, சிறப்பாக என் உளம் புகுந்தாயில்லை. அதனால்தான் நான் உன்னை அறியாமல் வழக்குப் பேச நேர்ந்தது. இப்போது சிறப்பாக என் "மனத்துள் உன்னை வைத்தாய்" ஆதலினால் இனி ஆள் அல்லேன் எனல் இயலாது என்று பெருமானுக்கும் இவருக்கும் உள்ள தொடர்பைத் தெளிவுபடுத்துகிறார். பாடல் காண்க.

பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
எத்தான் மறவாதே நினைக்கின்றேன், மனத்துன்னை
வைத்தாய், பெண்ணைத்தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள்
அத்தா! உனக்காளாய்இனி அல்லேன் எனலாமே.

-தி. 7 ப. 1 பா. 1

இங்கு அப்பர் அருளிய குறுந்தொகைப் பாடலையும் நினைவுகூர்தல் பொருத்தமாகும். அப்பாடல் வருமாறு.

என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான்
தன்னை நானும் முன்ஏதும் அறிந்திலன்
என்னைத் தன் அடியான் என்று அறிதலும்
தன்னை நானும் பிரான் என்று அறிந்தேனே.

-தி. 5 ப. 91 பா. 8

இத் திருப்பாடலில் மற்றொரு கருத்தையும் நாம் அறிதல் வேண்டும். இறைவனை நினைத்தற்கும் அவனருள் துணை வேண்டும் அவ்வருள் இல்லையேல் நினையவோ பாடவோ காணவோ இயலாது.

"அவன் அருளாலே அவன்தாள்வணங்கி"

-தி. 8 சிவபுரா. வரி 18

என்பார் மணிவாசகர். இந்நோக்கோடு இத்தேவாரத் திருப்பாடலை அணுகினால் இக்கருத்துப் புலப்படும். 'பெருமானே எதனால் மறவாதே உன்னை நினைக்கின்றேன்? அவ்வாறு நினைக்க நீ என் உள்ளத்தில் உன்னை வைத்துள்ளாய். இனியும் நான் உனக்கு ஆளல்லேன் எனல் ஆமோ?" என்கிறார் சுந்தரர். அவர் உள்ளத்தில் இறைவன் பேரருளோடு தன்னை வைத்து ஆட்கொண்டதாலேயே இத்திருப்பதிகம் பேரருள்திறம் பேசும் திருப்பதிகம் எனப் பெயர் பெறுவதாயிற்று.