திருக்கோயிலுக்குள் சென்றதும் வேதியராக வந்த இறைவன் மறைந்தார். இடபாரூடராகக் காட்சி தந்தார். வன்மை வழக்குப் பேசியதால் "வன்தொண்டன்" என்னும் பெயர் பெற்றனை. "நீ வழிபாடு செய்யும் குலத்தில் தோன்றியவன். நீ நமக்குச் செய்யவேண்டிய (அர்ச்சனை) வழிபாடு பாட்டேயாகும். ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுவாயாக" என்று அருளினார். "பெருமானின் பெருமை அறியாத அடியேன் என்ன சொல்லிப் பாடுவேன்" என்றபோது, பெருமான், "நீதான் முன்பே பித்தன் என்று என் பெருமையறிந்து பேசியுள்ளாயே அதையே முதலாக வைத்துப் பித்தன் என்றே பாடுக" என்று அருளினார். சுந்தரர், பெருமான் அருள்பெற்றவராய், ''பித்தா, பிறைசூடீ, பெருமானே, அருளாளா" என்று பதிகம் பாடிப் பெருமானின் கருணையை உள்ளவாறு விரித்துப் பாடியருளினார். பித்தா பிறைசூடீ : பித்தன் என்றால் பெரும் கருணையாளன் என்பதே பொருள். "பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு" என்பது நமது நாட்டுப் பழமொழி. இப்பழமொழியாலும் பெருமானின் பெருங்கருணைத் திறத்தையும் சுந்தரரின் வழக்குப் பேசிய வன்கண்மையையும் உணரலாம். அன்று கயிலாயத்தில் பெருமானை விட்டுப் பிரியும்போது "மையல் மானுடமாய் மயங்கும் வழி, ஐயனே தடுத்தாண்டு அருள்க" என்று வேண்டினார். வேண்டியவர் மறந்து விட்டார். பெரும் கருணையாளனாகிய பெருமான் மறப்பரோ? சொன்னபடியே வந்து தடுத்தாட்கொண்டார். சுந்தரர் "பித்தனோ மறையோன்" என்றதும் பெருமான் அருளால் வந்த சொல்லே என்பது தடுத்தாட்கொண்டபின் தெளிவாகத் தெரிகிறதன்றோ! இக்கருத்தை ஸ்ரீ குருஞான சம்பந்தர் அருள் வாக்காலும் நன்கு தெளியலாம். நீஇயற்ற ஓர்பொருளை நிச்சயித்த நாயேனும் போய்இயற்றல் செய்யப் புரிகுவேன் - நீஇயற்றல் ஆக்காது அணுவும் அசையுமோ அவ்விகற்பம் தாக்காத சொக்கநா தா. -சொக்கநாத வெண்பா இனிப் பாடலைக் காண்போம். பித்தா என்னும் பாடலில் ஐந்து விளிகள் (அழைப்பு) வந்துள்ளன. பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா! அருட்டுறையில் அத்தா! என்பன. அவை ஐந்து வகையாக விளித்து அழைத்து இனி ஆளல்லேன் என்று சொல்லவும் கூடுமோ, கூடாது என்றார். இதுவரை ஆளில்லை என்று வழக்குப்
|