தம் வாழ்வில் வேறுவகையில் குறிப்பிட்டுப் பாடியுள்ளமை கண்டு மகிழலாம். "துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி மறக்குமா றிலாதஎன்னை மையல்செய்து மண்ணின்மேல் பிறக்குமாறு காட்டினாய்" -தி. 2 ப. 98 பா. 5 என்பது ஞானசம்பந்தரின் அருள்வாக்கு. வன்றொண்டர் : ஆலாலசுந்தரர், இறைவன் ஆணைப்படி, திருநாவலூரில், ஆதிசைவ குலத்தில், சடையனார் இசைஞானியார் என்ற தவநிறை தம்பதியர்க்கு, மகவாய்த் தோன்றினார். திருமுனைப்பாடி நாட்டை ஆண்டுவந்த நரசிங்கமுனையரையரின் காதல் மகவாய், மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க வளர்ந்து, மணப்பருவம் எய்தினார். புத்தூர், சடங்கவி சிவாசாரியாரின் திருமகளை, மணம்புரியப் புகும்போதுதான், பெருமான் கிழவேதியராய் வந்து, கயிலையில் சொன்னசொல் தவறாமல், சுந்தரரை ஆட்கொண்டார். ஊரன் என்பதுதான் ஆரூரன் என்ற பொருளில் இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர். இது சுந்தரர் பாடல்களில் "ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே", "ஊரன் சொல்லிவை சொல்லுவார்க்கில்லை துன்பமே" என்பனபோல் இவர் தேவாரத்தில் பல இடங்களில் வந்துள்ளமையை அறியலாம். கடைசியாகத் திருக்கயிலாயம் சென்றபோது, பெருமான் இவரை "ஊரனே வந்தனை" என்று தான் அழைத்து மகிழ்ந்தார் என்பது நினைவுகூரத் தக்கது. இருப்பினும் திருக்கயிலையில் வழங்கிய ஆலாலசுந்தரர் என்ற பெயர்தான் சுந்தரர் என்ற பெயரில் பெரிதும் வழங்கி வருகிறது. மணக்கோலத்தில் இருந்த சுந்தரரைப் பெருமான் "இவன் எனக்கு அடிமை" என்று கூறியதைப் பொறாதவராய் "பித்தனோ மறையோன்" என்று அவர் வழக்குப் பேசி ஓலையைக் கிழிக்க, திருவெண்ணெய்நல்லூர் மறையோர் மன்றத்தில் சுந்தரர் அடிமை என்பதை நிறுவினார் இறைவர். "வெண்ணெய்நல்லூர்ப் பித்தன் என்று தங்கள் ஊர் குறிக்கப்பட்டிருக்கிறது. இவ்வூரில் தங்கள் இல்லம் எங்கு உள்ளது?" என்று எல்லோரும் கேட்டனர். "அறியீராயின் வாருங்கள்" என்று அனைவரையும் அழைத்துக்கொண்டு சிவனார் அருட்டுறைக் கோயில் நோக்கிச் சென்றார். வேதத்தால் காண முடியாத ஒன்றை ஆகமம் கண்டது. வேதம் வல்ல வெண்ணெய் நல்லூர் வேதியர் அனைவரும் கோயில் புறத்தே நிற்க, ஆகமம் வல்ல சிவாசாரியராகிய சுந்தரர் மட்டுமே காந்தம் கண்ட இரும்புபோலப் பின்தொடர்ந்தார்.
|