பக்கம் எண் :

4
 

இத்தகைய உறைப்புடைத் தொண்டரை இறைவன் நிச்சயம் காப்பான் என்பதை ஞானசம்பந்தர் வாக்காலும் நன்கு உணரலாம். அப்பாடல் பகுதி காண்க:

"தாம் என்றும் மனம் தளராத் தகுதியராய் உலகத்துக்(கு)
ஆம் என்று சரண்புகுந்தார் தமைக்காக்கும் கருணையினான்"

- தி. 2 ப. 40 பா. 2

ஆலால சுந்தரர் :

தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தபோது உண்டான ஆலால விஷத்தை எடுத்து வருவதற்காகத் தோன்றியவரே ஆலாலசுந்தரர். விஷத்தை எடுத்துவரத் தகுதியான ஒருவர் இன்மையால், பெருமான், தான் ஒரு கண்ணாடியின்முன் நின்றார். பெருமானின் பேரழகுத் தோற்றம் கண்ணாடியில் பிரதிபலித்தது. அத்தோற்றத்தை, வருக எனச் சுட்டு விரலால் அழைத்தார். அவர் அழகிய உருவுடன் இறைவன் முன்தோன்றினார். அவரை அனுப்பி ஆலால விஷத்தை எடுத்துவரச் செய்து அதனைத் தாம் உண்டு கண்டத்தில் அடக்கினார். இவ்வாலால சுந்தரர் உயிர் வர்க்கத்தைச் சேர்ந்தவரே; ஆனால் சிவ சிருஷ்டி. இந்நிலை எல்லோருக்கும் கிடைத்தற்கரியது.

அணுக்கத் தொண்டர் :

இவர் இறைவனுக்கு அணுக்கத் தொண்டராய், மலர் பறித்தல், திருநீற்றுப் பெட்டகம் எடுத்து வரல், முதலிய பணிவிடைகளைப் பலகாலம் செய்து வந்தார். ஒருநாள் நந்தவனத்தில் உமாதேவியின் சேடிப் பெண்களாகிய அநிந்திதை, கமலினி ஆகியோரைப் பார்த்தபோது, அவர்கள் மீது மனம், ஒரு சிறிது ஈடுபட்டது. அதனால் தமிழ் மக்கட்கும் தமிழ்நாட்டிற்கும் நல்லகாலம் பிறந்தது. இதனைச் சேக்கிழார்,

மாத வம்செய்த தென்திசை வாழ்ந்திடத்
தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப்
போது வார்அவர் மேல்மனம் போக்கினார்
காதல் மாதரும் காட்சியில் கண்ணினார்

-தி. 12 திருமலை 25

என்று அருளியுள்ளார்.

மையல் வாராத இடம் திருக்கயிலாயம். அங்குக் காதல் தோன்றியது என்றால் இறையருள்தான் அதற்குக் காரணம். இவரால் தமிழகம் உய்திபெற வேண்டும் என்ற பேரருளினால் இறைவனே நிகழ்த்திய திருவிளையாடல் இது.ஞானசம்பந்தரும் இக்கருத்தைத்