பக்கம் எண் :

3
 

பூசனைபுரியும் நெறி: உடல்பாதியும் உணர்வு பாதியும் கலந்த நெறி இது. 3. யோக நெறி - அறிவு முக்கால் பகுதியும், உடற்கூறு கால்பகுதியும் கொண்ட யோகப்பயிற்சி. இம்மூன்றும் சாதனைநெறி. 4. ஞானநெறி - இது சாத்தியம். மனிதன் அடையவேண்டிய முடிவான பயனாகிய நெறி இதுவே. ஞானமே சிவம், சிவமே ஞானம். அந்நிலையெய்தி, இரவு பகல் அற்ற இடத்தில், சிவம் வேறு தாம் வேறு என்றில்லாமல், சுத்தாத்துவிதமாய் நிற்கும் நிலை.

இந்நான்கு நெறிகளையும் விளக்கவந்தவர்களே நம் சமயாசாரியர்கள். என்றாலும் ஒவ்வொருவரும் ஞானநிலையில் சிவஞானிகளாகத் திகழந்தவர்களே. இந்நான்கு நெறிகளையும் எல்லோரும் ஈடேறுவதற்காக வகுத்து வைத்துள்ளனர். இந்நான்கும் தனித்தனி நெறியல்ல. இவற்றைப் பருவமாற்றமாகவே கொள்ள வேண்டும். சரியை அரும்புநிலை, கிரியை மலர்நிலை, யோகம் காய்நிலை, ஞானம் கனிநிலை. இக்கருத்தையே தாயுமானார்,

"விரும்பும் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்பு, மலர், காய், கனிபோல் அன்றோ பராபரமே"

-பராபரக்கண்ணி - 157

என்று அருளிச்செய்தார்.

சுந்தரர் கற்பிக்கும் பாடம் :

இந்நான்கு நெறியில் யோகநெறி காட்டியதோடு, நமக்கு ஆசாரியர்களாவோர் ஞானசம்பந்தர், நாவுக்கரசர் ஆகிய இவர்களே என்றும், நம்மால் வணங்கத்தக்க அடியார்கள் நாயன்மார்களே என்றும், விளக்கிக் காட்டியதோடு, வாழ்ந்தும் காட்டிய ஆசாரியர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆவார்.

இவரது வாழ்வில் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம், - குற்றம் செய்வது உயிர்களின் இயல்பெனினும், ஆன்மாக்கள் இறைநெறி பிழையாமல் எவ்வளவு துன்பம் வரினும், இறையே நம்மைக் காக்கும் என்ற உறுதிப்பாட்டுடன் ஒழுகினால், எல்லா இடர்களையும் கடந்து, வாழ்வாங்கு வாழ்ந்து இறைஅடி கூடலாம் - என்பதாகும். இறைவனும் சுந்தரர்க்குத் தன்னைத் தோழனாகக் கொடுத்தபோதிலும் சுந்தரர் செய்த தவறுகட்கெல்லாம் உடந்தையாயிராமல், தவறு கண்ட இடத்தில் தண்டித்துத் தன்னுடைய இறைத்தன்மையை - நடுநிலையைக் காட்டி, உண்மையை உணர்த்தி, அடியவராகிய சுந்தரரை ஆட்கொண்டுள்ளமை அறியுந்தோறும் இன்பம் பயப்பதாகும்.