பக்கம் எண் :

80
 

பொன்னியாற்றினால் பெருமை படைத்தது சோழநாடு. 'பொன்னித் திருநாடே புவிக்குத் திலகம்' என்று சேக்கிழார் சுவாமிகளால் பாராட்டப் பெற்றதும் சோழவளநாடுதான். இத்தகைய சோணாட்டிலும், தொண்டை, நடுநாடுகளிலும் இயற்கை எழில் நிறைந்த காட்சிகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. நடுநாட்டில் பிறந்து, தெய்வப் பெருமான் சேக்கிழார் சுவாமிகளால் 'துரிசறுநற் பெருந் தொண்டர்' என்று பாராட்டப் பெறுகின்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் அப்பொழுது தொண்டை நன்னாட்டில் சுற்றுலா செய்து கொண்டிருந்தார். திருவொற்றியூரில் சாருந்தவத்துச் சங்கிலியை - இருந்தவத்துக் கொம்பை - மணந்து மகிழ்ந்து சிலகாலம் தங்கியிருந்த பின்னர் அவர் உள்ளம் திருவாரூர் தியாகேசப் பெருமானை நினைந்து உருகியது. "எத்தனைநாள் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே" என்ற உணர்வு உள்ளத்தில் எழுந்ததும் சங்கிலிக்குச் செய்து கொடுத்த சபதத்தையும் மறந்து ஒற்றியூரை விட்டுப் புறப்பட்டார். 'எக்காரணத்தாலும் ஒற்றியூர் எல்லை கடவேன்' என்று மகிழின்கீழ் செய்த சபதத்தை மீறியதால் இரு கண்களையும் இழந்தார்.

ஊன் கண் மறைந்தாலும் உளக்கண்ணால் பெருமானைக் காணலாம் என்ற ஊக்கத்துடன் அடியார்கள் வழிகாட்ட ஆரூரர் செல்கிறார். வட திருமுல்லைவாயில் வழிபாடு நடக்கின்றது. உள்ளம் உருக இறைவனை வேண்டி வழிபடுகின்றார்.

திருமுல்லைவாயிலில் உறையும் செல்வனே! திருவும் மெய்ப் பொருளும் எனக்கு உன் சீருடைக் கழல்கள்தாமே! தண் பொழில் ஒற்றி மாநகர் உடையாய்! சங்கிலிக்காக என் கண் கொண்ட பண்பனே! வள்ளலே! குற்றமே செயினும் குணமெனக்கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன். அடியேன் பற்றிலேன்; எல்லியும் பகலும் பணிசெய்வேன். நாயினேனாகிய என்னை அன்று வெண்ணெய் நல்லூரினில் ஆட்கொள்ளவில்லையா? பன்னலம் தமிழாற் பாடுவேற்கு அருள்செய். சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச் சூழ்கொடி முல்லையினால் கட்டி எல்லையற்ற இன்பம் அவன் பெற வெளிப்பட்டு அருளியவனே! பல்கலைப் பொருளே! படுதுயர் களையாய், பாசுபதா பரஞ்சுடரே என்று திருநாவலூரர் வேண்டுகின்றார்.

இந்நிலையில் தொண்டை நாட்டின் எழில்மிக்க சூழலில் அமைந்துள்ள திருமுல்லை வாயிலின் வளத்தையும் வாயாரப் பாராட்டுகின்றார்.