பொன்னலம் பொலியும் செந்நெலம் கழனியில் பொறிவரி வண்டுகள் வயிறும் மனமும் நிறைந்த இன்பத்தில் பாடுகின்ற இசையில் இன்பங்கொண்டு நண்டு ஒன்று கமலத்தவிசில் உறங்குகிறது. உறங்கிய நண்டு பின் உலவுகின்றதாம். | பொன்னலம் கழனிப் புதுவிரை மருவிப் | பொறிவரி வண்டு இசைபாட | | அந்நலங்கமலத் தவிசின்மேல் உறங்கும் | அலவன் வந்துலவிட அள்ளற் | | செந்நெலங் கழனி சூழ்திருமுல்லை | வாயிலாய் திருப்புகழ் விருப்பால் | | பன்னலம் தமிழாற் பாடுவேற் கருளாய் | பாசுபதா பரஞ்சுடரே! | (தி. 7 ப. 69 பா. 4) |
என்று தளராத தமிழ்ப்பாவால் வளமுடைய தொண்டை நாட்டைப் பாடுகின்றார் வன்தொண்டர். தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து அல்லவா! திருத்தக்க தேவர் காட்டுகின்ற தக்க நாட்டில் அலவன் ஒன்று அதேதுறையில் வாழும் கன்னிவாளையின் உடலினைத் தனது நகத்தினால் தீண்டியது. அவ்வளவுதான் கன்னிவாளை ஊண் துறந்து ஒடுங்கிவிட்டதாம். காட்சி சீவக சிந்தாமணியில், வண்டுவாழ் கொடுந்துறைக் கன்னி வாளைமேல் நண்டுகி ருற்றென நடுங்கி நாணினால் விண்டொளித் தூண்துறந் தொடுங்கும் வீழ்புனல் கொண்டபூங் கிடங்கணி நகரம் கூறுவாம். -சீவக. சிந். கேமசரி. 32 என்று அலவனையும் வாளையையும் கொண்டு அழியாத சித்திரம் ஒன்றைத் தீட்டுகின்றார் திருத்தக்க தேவர். காக்கையைப் பாடிய நச்செள்ளையார் அலவனைப்பற்றிப் பதிற்றுப்பத்தில், "வண்டிறை கொண்ட தண்கடற் பரப்பின் அடும்பம லடைகரை யலவ னாடிய வடுவடு நுண்ணயிர் ஊதை யுஞற்றும்." -பதிற்றுப் - 51 என்கிறார். அலவன் மணலில் கடந்துசென்ற சுவட்டினை அலையாலும் காற்றாலும் அறியப்படும் நுண்மணல் பரந்து மறைக்கின்றது என்கிறார்.
|