தாமரைத் தவிசில் - செந்திருவினாள் துயில் கொள்ளும் அரிய காட்சி கம்பர் காட்டும் காட்சியாகும். நீரில் சங்கமும், நிழலில் மேதியும், தாரில் வண்டும், தாமரையில் செய்யவளும், தூரில் ஆமையும், துறையில் இப்பியும், போரில் அன்னமும், பொழிலில் தோகையும் உறங்குவனவாகக் கூறுகின்றார். நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி தாரிடை உறங்கும்வண்டு தாமரை உறங்கும் செய்யாள் தூரிடை உறங்கும் ஆமைதுறையிடை உறங்கும் இப்பி போரிடை உறங்கும் அன்னம் பொழிலிடை உறங்கும் தோகை -கம்ப. பால. நாட்டுப். 6 இன்னொரு காட்சி: சேலைப் பழிக்கும் விழியுடையாரைப் போல் திரிகின்ற செங்கால் அன்னம் - தனது மழலைப் பிள்ளையைத் தாமரைத் தவிசில் கிடத்தியது. சேற்றில் மாட்டிக்கொண்ட மேதி கன்றை நினைந்து சொரியும் பாலைக் குடித்த அன்னத்தின் குழவி தேரையின் தாலாட்டில் கண் வளர்கின்றது. சேலுண்ட ஒண்கணாரின் திரிகின்ற செங்கால் அன்னம் மாலுண்ட நளினப்பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை காலுண்ட சேற்று மேதி கன்றுள்ளிக் கனைப்பச் சோர்ந்த பாலுண்டு துயிலப் பச்சை தேரை தாலாட்டும் பண்ணை. -கம்ப. பால. நாட்டுப். 13 தாமரைத் தவிசில் கண்வளர்கின்ற அலவனையும் அன்னக் குழவியையும் இன்று தெய்வப் புலவர்களின் பாடல்கள் மூலம் நாம் காண்கின்றோம். புதுமணத் தம்பதிகளாகிய அன்னங்களைத் தாமரைத் தவிசில் அமர்வித்துத் தடாகமாகிய பெண் தனது அலைக்கரங்களால் தாமரை இலையாகிய மரகதத் தட்டில் நீர்த்துளிகளாகிய முத்துக்களைப் போட்டு ஆரத்தி எடுப்பதாகப் பரஞ்சோதிமுனிவர் தெரிவிக்கின்றார். எழில்நிறைந்த சோழநாடும், தொண்டைநாடும் ஏற்றமிகு தமிழ்க் கவிதைகளும் என்றும் நெஞ்சைவிட்டு நீங்கா.
|