பக்கம் எண் :

845
 

51. திருவாரூர்

பதிக வரலாறு:

சுவாமிகள், திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்து மகிழ்வுற்றிருக்கும் நாள்களில், தமிழ்ப்பொதியமலைப் பிறந்த கொழுந்தென்றல் அணைய, திருவாரூர் வீதிவிடங்கப் பெருமானது வசந்த விழாவை நினைவுகூர்ந்து புற்றிடகொண்டிருந்தாரை ஈங்கு நான் மறந்தேன் என்று மிக அழிந்து அவரை நினைந்து பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 273)


குறிப்பு: இத்திருப்பதிகம் நுதலிய பொருள் இதன் வரலாற்றானே விளங்கும்.

பண்: பழம்பஞ்சுரம்

பதிக எண்: 51

திருச்சிற்றம்பலம்

518.பத்திமையும் மடிமையையுங்

கைவிடுவான் பாவியேன்

பொத்தினநோ யதுஇதனைப்

பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்

முத்தினைமா மணிதன்னை

வயிரத்தை மூர்க்கனேன்

எத்தனைநாள் பிரிந்திருக்கேன்

என்ஆரூர் இறைவனையே.

1


1. பொ-ரை: பாவியும். மூடனும் ஆகிய யான், என் அன்பையும், அடிமையையும் விட்டொழியும்படி, முத்தும், சிறந்த மாணிக்கமும், வயிரமும் போன்ற எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து எத்தனை நாள் இவ்விடத்திற்றானே இருப்பேன்! என்னை மூடியுள்ள நோயாகிய இவ்வுடம்பின் மெய்ம்மையை அறிந்துகொண்டேன்; ஆதலின் இங்கு இரேன்; விரையச் சென்று அவனை வணங்குவேன்.

கு-ரை: "போய்த் தொழுவேன்" என்றது, வருகின்ற திருப்பாடல்களிலும் சென்று இயையும். "அது", பகுதிப்பொருள் விகுதி. உயிரோடு ஒன்றித்து நிற்பது உடம்பேயாகலின், "இது" என்றது, அதனையே ஆயிற்று. 'இத்தன்மைத்தாகிய உடலின்பங் கருதி ஈண்டு