பக்கம் எண் :

920
 

கழுமல வளநகர்க் கண்டுகொண் டூரன்

சடையன்றன் காதலன் பாடிய பத்துந்

தொழுமல ரெடுத்தகை அடியவர் தம்மைத்

துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே.

10

திருச்சிற்றம்பலம்


பட்டதொரு சொல். "ஓரேன்" என்ற முற்றெச்சத்தின்பின், 'வந்து' என்பது வருவிக்க. "காரிருள்போன்ற கறையணி மிடறுடை யடிகள்" என்றது, சிவபெருமான் என்னும் சிறப்புப் பெயரளவாய் நின்றது. இத் திருப்பாடலின் பொருளைச் சிறிதும் உணரமாட்டாமையால், பாடத்தைப் பலபட வேறுபடுத்தோதினர்; அவையெல்லாம் சிறிதும் ஒவ்வாமை அறிந்துகொள்க.

10. பொ-ரை: செழுமையான கொன்றையினது மலரும், வில்வ இலையாகிய மலரும் கலந்துள்ள சடைமுடியையுடைய தலைவனை நினைந்து, அன்பினால் அழுகின்ற மலர்போலும் கண்ணிணையுடைய அடியார்க்கல்லது அறிதற்கரிய இணையாகிய அவன் திருவடிகள் இரண்டினையும், 'திருக்கழுமலம்' என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டு, சடையனார்க்கு மகனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பத்துப் பாடல்களாலும் தொழுகின்ற, மலரைத் தாங்கிய கைகளையுடைய அடியார்களை, துன்பமும், இடும்பையும் அணுகமாட்டா.

கு-ரை: கூவிளை. ஆகுபெயராய் அதன் இலையைக் குறித்தது. அவ்விலையை, மலர்கள் பலவற்றினும் சிறந்ததாகச் சிவபிரான் விரும்புதலின், அதனையே, "மலர்" என்று அருளினார். இணை ஒன்றே யாகலின், "அரிது" என ஒருமையாற் கூறப்பட்டது. 'அரிதாகிய இணையாகிய அவன் அடியிரண்டும்' என்க. 'பத்தினாலும் தொழும்' என உருபு விரித்து முடிக்க. 'தொழும் அடியவர், மலர் எடுத்த கை' அடியவர் எனத் தனித்தனி இயைக்க. துன்பம், இன்பத்திற்கு எதிராய நுகர்ச்சி. இடும்பை, அதற்குக் காரணமாவன பலவற்றுள் ஒன்றாய இடையூறு. இடையூறு இல்லை என்றதனால், எடுத்த செயல் முற்றி இன்புறுவர் என்றவாறாம்.