பக்கம் எண் :

923
 

59. திருவாரூர்

பதிக வரலாறு:

கொடுங்கோளூரில், சேரமான் பெருமாளது வழிபாட்டை ஏற்றிருந்த சுந்தரர், ஆரூர்ப் பெருமானை நினைந்து, "ஆவியை ஆரூரானை மறக்கலும் ஆமே" என்று பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. கழறிற். புரா. 156)

குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவரது தன்மைகள் பலவற்றையும் நினைந்து, அவர் தமக்குத் திருவாரூரில் எளிவந்து அருளுபவராய் இருத்தலின், அவரை மறக்கலாற்றாமையை அருளிச் செய்தது.

பண்: தக்கேசி

பதிக எண்: 59

திருச்சிற்றம்பலம்

603.பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப்

போக மும்திரு வும்புணர்ப் பானைப்

பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்

பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை

இன்ன தன்மையன் என்றறி வொண்ணா

எம்மா னைஎளி வந்தபி ரானை

அன்னம்வை கும்வ யற்பழ னத்தணி

ஆரூ ரானை மறக்கலு மாமே.

1


1. பொ-ரை: எனக்குப் பொன்னையும், மெய்யுணர்வையும், வழங்குபவனும், அவை வாயிலாக உலகின்பத்தையும், வீட்டின்பத்தையும் சேர்ப்பிக்கின்றவனும், அதன்பின் யான் அவ்வின்பங்களை நுகரும்பொழுது செய்கின்ற பிழைகளைப் பொறுத்துக்கொள்பவனும், பின்னர்ப் பிழைகளே வாராதவாறு அருள்செய்பவனும், இன்ன தன்மையை உடையவன் என்று வரையறுத்து உணர ஒண்ணாத எங்கள் தலைவனும், எனக்கு எளிவந்த பெருமானும் ஆகிய, அன்னங்கள் தங்கியுள்ள வயல்களை யுடைய பண்ணைகளையுடைய அழகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ!

கு-ரை: "மெய்ப்பொருள்" என்றது, அதனையுணரும் உணர்வை. உணர்விற்கு, உணர்தல் தன்மையைத் தருதலின்