விளக்கம் : பேரின்ப நாட்டத்தையே முனிவிலாத பொருள் என்றார். ‘ஆறு கோடி’ என்றது, மிகுதியைக் குறித்தது. பின் கூறப்படுவது அவற்றுள் சிலவற்றை எடுத்துக் கூறியதாம். நண்பரும் அயலாரும் கடவுள் உண்டு என்ற எண்ணம் உண்டாகும் போது இல்லை என்று பேசுவார். அவர்களை ‘நாத்தழும் பேறியவர்’ என்று வன்மையாகக் கண்டிக்கிறார். சுற்றம் - மனைவி மக்கள் முதலியோர். ஒருவன் நல்ல நெறியை அடைய முயலும்போது, இவர்கள் அவனைத் தம்மை விட்டுப் பிரிந்து செல்லாதபடி அழுதும் அரற்றியும் தடுத்து நிற்பார்கள், அதனால், ‘பற்றி அழைத்துப் பதறினர் பெருக’ என்றார். "உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத் தலகையா வைக்கப்படும்" என்றார் நாயனாரும். இனி, வேதத்தில் ஞான காண்டத்திலே நாட்டம் இல்லாது கரும காண்டத்தில் விருப்புடையோரையே "வேதியர்" என்றாா. இவர் 'கன்மமே பயன் தரும், கடவுள் வேண்டா' என்று கூறுவதால், "விரதமே பரமாக, சரதமாகவே சாத்திரம் காட்டினர்" என்றார். மாயா வாதமாவது சங்கரரால் பரப்பப்பட்ட மதம். இது 'அகம் பிரமம்' என்பது. உலகம் யாவையும் மாயையென்னும் கொள்கையுடையது. இக்கொள்கை சங்கரருக்கு முன்பே உண்டு. சண்ட மாருதம் - பெருங்காற்று. பெருங்காற்று, பிற பொருள்களையெல்லாம் எடுத்தெறிந்து பரவுவது போல மாயா வாதம் பரவிற்று என்பதை உணர்த்த "மாயா வாதம் என்னும் சண்ட மாருதம்" என்றார். உலோகாயதம் காட்சியே அளவையென்றும், பூதங்கள் நான்கே என்றும், சரீரமே ஆன்மாவென்றும், மறுமையும் கடவுளும் இல்லையென்றும், இன்பமும் பொருளுமே புருஷார்த்தங்களென்றும் சொல்லும் மதம். பாம்பு ஒளியுடையது; ஆனால், விடத்தைக் கொண்டது. உலோகாயதம் கவர்ச்சி யுடையது; ஆனால், தீமையுடையது. இனி, விடம் இம்மையில் தீமை புரிவது. உலோகாயத மதம் இம்மை மறுமை இரண்டிலும் தீமை புரிவது. அதனால் உலோகாயத மதத்தைப் "பாம்பு" என்றும், அதன் பயனைக் "கடுவிடம்" என்றும் கூறினார். கலாபேதம் - சாத்திர வேறுபாடுகள். அவை உயிர்நூல், உளநூல், பயிர்நூல், உடல்நூல் முதலியன. இவை மெய்ந்நெறியைக் காட்டாமையின், உலோகாயதத்தின் உட்கூறுகளாகக் கூறினார்.
|