45. வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின ஆத்த மானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர் சுற்ற மென்னும் தொல்பசுக் குழாங்கள் பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும் 50. விரத மேபர மாகவே தியரும் சரத மாகவே சாத்திரம் காட்டினர் சமய வாதிகள் தத்த மதங்களே அமைவ தாக அரற்றி மலைந்தனர் மிண்டிய மாய வாத மென்னும் 55. சண்ட மாருதம் சுழித்தடித் தாஅர்த் துலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின் கலாபே தத்த கடுவிடம் எய்தி அதிற்பெரு மாயை எனைப்பல சூழவும் பதப்பொருள் : தெய்வம் என்பது - தெய்வம் உண்டு என்பதாகிய, ஓர் சித்தம் உண்டாகி - ஒரு நினைப்பு உண்டாகி, முனிவு இலாதது - வெறுப்பில்லாததாகிய, ஓர் பொருள் கருதலும் - ஒரு பொருளை நாடுதலும், ஆறு கோடி மாயா சத்திகள் - ஆறு கோடியெனத் தக்கனவாய் மயக்கம் செய்ய வல்ல சடவுலக ஆற்றல்கள், வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின - வேறு வேறாகிய தம் மாயைகள் தொடங்கின - வேறு வேறாகிய தம் மாயைகளைச் செய்யத் தொடங்கினவாகவும், ஆத்தமானார் - நட்பாயி னோரும், அயலவர் - அயலாராயினோரும், கூடி - கலந்து, நாத்திகம் பேசி - கடவுள் இல்லையென்று பொய் வழக்குப் பேசி, நா தழும்பு ஏறினர் - நாவில் தழும்பேறப் பெற்றனர், சுற்றம் என்னும் - உறவினர் என்கின்ற, தொல் - பழமையாகிய; பசுக்குழாங்கள் - பசுக்கூட்டங்கள், பற்றி அழைத்து - பின்பற்றியழைத்து, பதறினர் பெருகவும் - பதறிப் பெருகவும், வேதியரும் - மறையோரும், விரதமே பரமாக - விரதத்தையே மேன்மையான சாதனம் என்று, சரதம் ஆக - தம் கொள்கை உண்மையாகும்படி, சாத்திரம் காட்டினர் - நூற் பிரமாணங்களைக் காட்டினார்களாகவும், சமயவாதிகள் - சமயவாதிகள் எல்லாம், தம் தம் மதங்களே அமைவதாக - தம் தம் மதங்களே ஏற்புடைய மதங்களாகும் எனச் சொல்லி, அரற்றி மலைந்தனர் - ஆரவாரித்துப் பூசலிட்டார்களாகவும், மிண்டிய மாயாவாதம் என்னும் - உறுதியான மாயாவாதம் என்கிற, சண்டமாருதம் - பெருங்காற்றானது, சுழித்து அடித்த ஆர்த்து - சுழன்று வீசி முழங்கவும், உலோகாயதன் எனும் - உலோகாய தனது மதம் என்கிற, ஒள் திறல் பாம்பின் - ஒள்ளிய வலிமையுடைய பாம்பினது, கலா பேதத்த - கலை வேறுபாடுகளையுடைய, கடுவிடம் எய்தி - கொடிய நஞ்சு வந்து சேர்ந்து, அதில் - அதிலுள்ள, பெருமாயை - பெருஞ் சூழ்ச்சிகள், எனைப் பல சூழவும் - எத்தனையோ பலவாகச் சுற்றித் தொடரவும்.
|