பக்கம் எண் :

திருவாசகம்
102


விடத்தினின்று தப்பியும், புல் வரம்பு ஆகிய - சிறிய எல்லைகளையுடைய, பல்துறை பிழைத்தும் - பல வகைப்பட்ட முயற்சிகளில் தப்பியும்.

விளக்கம் : வினைக்கு ஈடாக உயிரானது பல பிறப்புகளில் பிறந்து இளைக்கின்ற தன்மையைக் குறிப்பிட, "யானை முதல் எறும்பீறாய்" என்றார்.

அடுத்து, மானுடப்பிறப்பில் பத்து மாதங்கள் தாய் வயிற்றில் உண்டாகும் பலவகையான வேதனைகளைக் குறிப்பிடுகிறார், தான்றி - தான்றிக்காய். இஃது உடல் திரண்டு முனை குவிந்து இருக்கும். மதியின் இயக்கம் பற்றி வரையறுக்கப்படுவது மாதம். ஆதலால், மாதத்தை மதியெனக் குறிப்பிட்டார். பத்தாம் மாதத்தில் தாய் படும் துன்பத்தை, "துக்க சாகரம்" என்றும், குழவி படும் துன்பத்தை, "துயர்" என்றும் பிரித்துக் கூறினார்.
குழவியாய்ப் பிறந்த பின்னைத் தினசரி வாழ்க்கையில் உண்டாகும் துன்பங்களைக் குறிப்பிடுவார், "காலை மலமொடு கடும்பகற் பசிநிசி வேலை நித்திரை யாத்திரை" என்றார்.

அடுத்துக் காமத்தால் வரும் நோயைக் கூறினார். ஆடவரை நோய் செய்வது மகளிரின் கண்ணேயாதலின் "நயனக் கொள்ளை" என்றார். ஆசை நிறைவேறாதபோது கோபம் உண்டாகும். கோபம் மயக்கத்தில் தள்ளும். செய்யத்தக்கது எது, செய்யத்தகாதது எது என்று அறியாது இருக்கும் நிலை மயக்கமாம். ஆதலால், ஆசையை மதம் பிடித்த யானையாக உருவகித்தார். மதம் கொண்ட யானையின் செயலும் இதுதானே! அதனால்தான் தெய்வப் புலவர் திருவள்ளுவர், "காமம் வெகுளி மயக்கம்" என்ற மூன்றையும் ஓர் அடுக்காகக் கூறினார்.

கடல் ஆழமானது; அகலமுடையது; எல்லை காண முடியாதது. அதைப் போலக் கல்வியும் ஆழமானது; அகலமுடையது எல்லை காண முடியாதது. ஆதலால், கல்வியைக் கடல் என்றார்.

பொருளை ஈட்டலும் துன்பம், ஈட்டிய பொருளைக காத்தலும் துன்பம். அதனால் செல்வத்தை அல்லல் என்றே கூறினார்.

விடம், உண்டவனைக் கொல்லும், வறுமையும் உடையவனைக் கொல்லும். அதனால் வறுமையை விடம் என்றார். வாழ்க்கையின் பொருட்டு ஓர் அளவில் நிற்கும் முயற்சிகள் பலவாதலைக் குறிப்பிடப் "புல்வரம்பாய பல்துறை பிழைத்தும்" என்றார்.

இவற்றால் பிறவித்துன்பம் கூறப்பட்டது.

தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி
முனிவி லாததோர் பொருளது கருதலும்
ஆறு கோடி மாயா சத்திகள்