பக்கம் எண் :

திருவாசகம்
120


அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள்கெட அருளும் இறைவா போற்றி!

பதப்பொருள் : அம்மான் - அம்மானே, அருளிட வேண்டும் - அருள் செய்ய வேண்டும், போற்றி - வணக்கம், இருள் கெட அருளும் இறைவா - அஞ்ஞான இருள் அழியும்படி அருள் செய்கின்ற இறைவனே, போற்றி - வணக்கம்.

விளக்கம் : சூரியனைக் கண்டவுடன் இருள் நீங்குவது போல, பதியாகிய இறைவன் முன் பாசமாகிய இருள் விலகுமாதலால், தமது பாச இருள் கெட அருளும்படி இறைவனை வேண்டினார்.

170. தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி!

பதப்பொருள் : அடியேன் தமியேன் தளர்ந்தேன் - அடியேன் துணையற்றவனாய்த் தளர்ச்சியடைந்தேன், போற்றி - வணக்கம்.

களங்கொளக் கருத அருளாய் போற்றி!

பதப்பொருள் : களங்கொளக் கருத அருளாய் - நிலையான இடத்தைப் பெற எண்ணும்படி அருள்புரிவாய், போற்றி - வணக்கம்.

விளக்கம் : ‘நிலையற்ற பொருள்களைப் பற்றிப் பற்றி இளைத்த எனக்கு நிலையான இடத்தைப் பெற வேண்டும் என்னும் விருப்பத்தை அருள்வாயாக’ என்று வேண்டினார்.

அஞ்சே லென்றிங் கருளாய் போற்றி
நஞ்சே யமுதா நயந்தாய் போற்றி!

பதப்பொருள் : அஞ்சேல் என்று இங்கு அருளாய் - அஞ்சாதே என்று இப்பொழுது எனக்கு அருள் செய்ய வேண்டும், போற்றி - வணக்கம்; நஞ்சே அமுதா நயந்தாய் - நஞ்சையே அமுதமாக விரும்பினவனே, போற்றி - வணக்கம்.

விளக்கம் : ‘ஆலகால விடத்திற்கு அஞ்சி ஓடிவந்த அமரர்களை "அஞ்சற்க" என்று சொல்லி, அதனை உண்டு காத்தவனாகிய நீ எனக்கு ‘அஞ்சேல்’ என்று அருள் செய்ய வேண்டும்’ என்கிறார். நஞ்சையமுதா நயந்தது; தேவர்கள் அமுதைப் பெறத் திருப்பாற்கடலை விரும்பிக் கடைந்தார்கள். ஆனால், அதனின்றும் நஞ்சே தோன்றியது. தேவர்கள் அது கண்டு அஞ்சி முறையிட்டார்கள்; அவர்களைக் காக்கும்பொருட்டு இறைவன் நஞ்சை உண்டு, பின் அமுதத்தை அளித்தான். அதுதான் சிறப்புடைய நாகரிகம் என்று திருவள்ளுவ நாயனாரும், "நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்" என்று இச்செயலைப் போற்றுகிறார்.

அத்தா போற்றி ஐயா போற்றி

175. நித்தா போற்றி நிமலா போற்றி
பத்தா போற்றி பவனே போற்றி!