பக்கம் எண் :

திருவாசகம்
119


தேவர்கள் முதலானோர் அவன் வெற்றியைப் பாராட்டிப் பலரும் கையுறை நல்கினார்கள். துருவாச முனிவர் சிவலிங்கத்தினிடத்துக் கிடைத்த மலரைக் கொடுத்தார். ஆனால், இந்திரன் செருக்குற்று அதனை வாங்கித் தன் பட்டத்து யானையாகிய அயிராவதத்தின் மத்தகத்தின்மேல் வைத்தான். அது அந்த மலரின் அருமையறியாது கீழே தள்ளிக் காலால் சிதைத்தது. துருவாச முனிவர் கோபங்கொண்டு, அயிராவதத்தைக் காட்டு யானையாகக் கடவது எனச் சாபமிட்டார். அவ்வாறே அவ் வெள்ளையானை கடம்பவனத்தில் காட்டானையாய்ப் பிறந்து இறைவனை வழிபட்டு முத்தி பெற்றது. (திருவிளையாடற் புராணம் - வெள்ளையானைச் சாபம் தீர்த்த படலம்)

சிவாலயங்கள் தென்னாட்டிலேயே சிறப்புற்று விளங்குதலால் "தென்னாடுடைய சிவன்" என்றும், பிற நாட்டில் பல தெய்வங்களாகப் பலவாறு வழிபடப்படுவதால், "எந்நாட்டவர்க்கும் இறைவா" என்றும் கூறினார்.

இவற்றால், இறைவன் உயிர்களின் பொருட்டுத் திருக்கோயில் கொண்டுள்ள இடங்களை நினைத்து வணக்கங்கூறினார்.

ஏனக் குருளைக் கருளினை போற்றி
மானக் கயிலை மலையாய் போற்றி!

பதப்பொருள் : ஏனக் குருளைக்கு அருளினை - பன்றிக் குட்டி களுக்குக் கருணை காட்டி அருளினவனே, போற்றி - வணக்கம், மானக் கயிலை மலையாய் - பெரிய கயிலாய மலையில் இருப்பவனே, போற்றி - வணக்கம்.

விளக்கம் : ஏனக்குருளைக்கு அருளியது - தவம் செய்து கொண்டிருந்த ஒரு முனிவரிடம் குறும்பு செய்த பன்னிரண்டு இளைஞர்கள் அம்முனிவரின் சாபத்தால் காட்டில் பன்றிக் குட்டிகளாய்ப் பிறந்தார்கள். அக்குட்டிகளின் தாய் அம்பு பட்டு இறந்தது. இறைவன் இரங்கிப் பன்றி வடிவில் வந்து, பால் கொடுத்து, அக்குட்டிகளைக் காப்பாற்றினான். அவை பின்னர்ப் பண்டையறிபு வரப்பெற்றுப் பாண்டியனுக்கு அமைச்சராய்த் திகழ்ந்தன. (திருவிளையாடற்புராணம் - பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த படலம்) "ஏவுண்ட பன்றிக் கிரங்கி யீசன் எந்தை பெருந்துறை ஆதி அன்று - கேவலங் கேழலாய்ப் பால் கொடுத்த கிடப்பறிவார் எம்பிரானாவாரே" என்று அடிகள் பின்னும் கூறுவார்.

உயர்ந்த கயிலாய மலையில் வீற்றிருப்பவனாகிய இறைவன் சிறிய பன்றிக்குட்டிகளுக்குத் தாயாகி வந்து பால் கொடுத்து எளிமையைக் குறிப்பிட, ஏனைக்குருளைக்கு அருளியதை அடுத்து, "மானக் கயிலை மலையாய்" என்றார்.