பக்கம் எண் :

திருவாசகம்
118


வனப்பு நிறைந்த திருப்பழனத்திலுள்ள அழகனே, போற்றி - வணக்கம், கடம்பூர் மேவிய விடங்கா - திருக்கடம்பூரில் எழுந்தருளிய சுயம்புவே, போற்றி - வணக்கம்.

விளக்கம் : திருவாரூரில் இறைவன் தியாகராசனாய் வீற்றிருந்து அருளுதலின், "ஆரூர் அமர்ந்த அரசே" என்றார். திருவண்ணாமலையில் இறைவன் சோதி வடிவாகக் காட்சி யளித்தலால், "கண்ணார் அமுதக் கடலே" என்றார். கச்சி ஏகம்பத்தில் உமையம்மை இறைவனை வழிபட்டுக் கம்மையாற்றின் வெள்ளத்திற்கு அஞ்சி இறைவனைத் தழுவிக்கொள்ள, இறைவன் தழுவக் குழைந்த பெருமானாகி இறைவியை மணம் செய்தருளின மையால், "பாகம் பெண்ணுருவானாய்" என்றார். பஞ்ச சபைகளில் திருக்குற்றாலம் சித்திரசபையாக, அதன்கண் இறைவன் கூத்தப்பெருமானாய் நடனம் புரிதலால், "குற்றாலத்தெம் கூத்தா" என்றார். கோகழி - பெருந்துறை; இது, பசுத்தன்மை கழிந்த இடம்; உமாதேவி பசுவாகி வழிபட்டு இறைவனை அடைந்த இடம்; திருவாவடுதுறை என்பாரும் உளர். கடம்பூர் தென்னார்காட்டு மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள கோயிலை இந்திரன் பெயர்க்க முயன்று இயலாதவனாயினான் என்பர். அதனால், அங்குள்ள இறைவனைச் சுயம்புமூர்த்தி என்றார்.

அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி
இத்தி தன்னின் கீழிரு மூவர்க்
கத்திக் கருளிய அரசே போற்றி
தென்னா டுடைய சிவனே போற்றி

165. எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி

பதப்பொருள் : அடைந்தவர்க்கு அருளும் அப்பா - உன்னை அடுத்தவர்க்கு அருள் செய்கின்ற அப்பனே, போற்றி - வணக்கம், இத்தி தன்னின்கீழ் - கல்லால மரத்தின்கீழ் பட்டமங்கையில், இரு மூவர்க்கு - இயக்கியர் அறுவர்க்கும், அத்திக்கு - (கடம்ப வனத்தில்) வெள்ளானைக்கும், அருளிய அரசே - அருள் செய்த அரசனே, போற்றி - வணக்கம், தென்னாடு உடைய சிவனே - மற்றும் பல தலங்கள் உள்ள தென்னாட்டை யுடைய சிவபிரானே, போற்றி - வணக்கம், எந்நாட்டவர்க்கும் இறைவா - வேறு பல நாட்டவர்களுக்கும் வழிபடு தெய்வமானவனே, போற்றி - வணக்கம்.

விளக்கம் : "இத்திதன்னின் கீழ் இருமூவர்க்கு" அருளிய வரலாறு; முன்னர்க் கீர்த்தித் திருவகவலின் "பட்டமங்கையில் பாங்கா யிருந்தங் கட்டமா சித்தி யருளிய அதுவும்" என்பதன் உரையில் கூறப்பட்டது.

அத்திக்கருளியது : முன்னொரு காலத்துத் தேவேந்திரன் வெற்றி வீரனாய்ப் பூவுலகிலிருந்து தேவவுலகம் சென்றான்.