வீடு பேற்றினைக் குறிக்கின்றது. அந்த வீடு பேறாய் இருப்பவன் மங்கலப் பொருளாய் இருப்பவனே; அதனால், "சிறவே போற்றி சிவமே போற்றி" என்றார். மஞ்சா போற்றி மணாளா போற்றி பஞ்சே ரடியாள் பங்கா போற்றி! பதப்பொருள் : மஞ்சா போற்றி - ஆற்றலுடையவனே வணக்கம், மணாளா போற்றி - அழகுடையவனே வணக்கம், பஞ்சு ஏர் அடியாள் பங்கா - செம்பஞ்சுக் குழம்பு பூசிய அழகிய பாதங்களையுடைய உமாதேவி பாகனே, போற்றி - வணக்கம். விளக்கம் : "மைந்தன்" என்பது, "மஞ்சன்" எனப் போலியாய் வந்தது. மைந்து - வலிமை. இறைவன் எல்லாம் வல்லவன் என்பதைக் குறிக்க, "மஞ்சா" என்றார். சிவம் சத்திகளின் வேறு பாடற்ற ஒத்த நிலையை விளக்க ‘மணாளன்’ என்றும் ‘பஞ்சேரடியாள்’ என்றும் கூறினார். 185. அலந்தே னாயே னடியேன் போற்றி இலங்கு சுடரெம் மீசா போற்றி! பதப்பொருள் : நாயேன் அலந்தேன் - நாயினேன் வருத்த முற்றேன், அடியேன் போற்றி - நின் அடியவன் நினக்கு வணக்கம். இலங்கு சுடர் எம் ஈசா - விளங்குகின்ற ஒளியையுடைய எம் ஆண்டவனே, போற்றி - வணக்கம். விளக்கம் : இறைவன் ஆண்டருளிய பின்பும் தமக்கு வீடு பேறு கிட்டாமை பற்றி அடிகள், "அலந்தேன் நாயேன்" என்று கூறி, "அடியேன் போற்றி" என்று அதனைத் தரும்படி வேண்டுகிறார். பெரியோர்கள் இறைவனை வணங்குவது வீடுபேறு வேண்டித்தானே! கவைத்தலை மேவிய கண்ணே போற்றி குவைப்பதி மலிந்த கோவே போற்றி மலைநா டுடைய மன்னே போற்றி 190. கலையார் அரிகே சரியாய் போற்றி திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி பொருப்பமர் பூவணத் தரனே போற்றி பதப்பொருள் : கவைத்தலை மேவிய கண்ணே - கவைத்தலை யென்னும் திருப்பதியில் விரும்பி எழுந்தருளிய கண் போன்றவனே, போற்றி - வணக்கம், குவைப்பதி மலிந்த கோவே - குசைப்பதியென்னும் ஊரிலே மகிழ்ந்திருந்த இறைவனே, போற்றி - வணக்கம், மலை நாடு உடைய மன்னே - மலை நாட்டையுடைய மன்னனே, போற்றி - வணக்கம், கலை ஆர் அரிகேசரியாய் - கல்வி மிகுந்த அரிகேசரியென்னும் ஊரினை உடையாய், போற்றி - வணக்கம், திருக்கழுக்குன்றில் செல்வா - திருக்கழுக் குன்றிலுள்ள
|