செல்வனே, போற்றி - வணக்கம், பொருப்பு அமர் - கயிலை மலையில் வீற்றிருக்கின்ற, பூவணத்து அரசே - திருப்பூவணத்திலுள்ள பெருமானே, போற்றி - வணக்கம். விளக்கம் : கலைத்தலை, குவைப்பதி என்பன ஊர்களின் பெயர்கள். அவ்வூர்கள் எங்குள்ளன என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. மலைநாடு - சேர நாடு. சேர நாட்டிலும் அடிகள் காலத்தில் பல சிவத்தலங்கள் இருந்தமை இதனால் அறியப்படும். அரிகேசரி என்னும் தலமும் எங்குள்ளது என்பது விளங்கவில்லை. அருவமும் உருவமும் ஆனாய் போற்றி மருகிய கருணை மலையே போற்றி! பதப்பொருள் : அருவமும் உருவமும் ஆனாய் - அருவம் உருவம் என்னும் திருமேனிகளைக் கொண்டவனே, போற்றி - வணக்கம், மருவிய கருணை மலையே - என்னிடத்தில் வந்து பொருந்திய அருள் மலையே, போற்றி - வணக்கம். விளக்கம் : இறைவனுக்கு மூன்று வகை உருவங்கள் சாத்திரங்களில் கூறப்படுகின்றன. அவையாவன அருவம், உருவம், அருவுருவம் என்பன. அருவம் - உருவமின்மை. உருவம் - மாகேசுர மூர்த்தங்கள்; அவை இருபத்தைந்து. அருவுருவம் - இலிங்கத் திருமேனி. அருவம் உருவம் என்னும் இரண்டைக் கூறியதனால் அருவுருவம் என்பதும் கொள்ளப்படும். அருவம் முதலிய மூவகைக் திருமேனிகளில் அடிகளுக்கு இறைவன் வந்தருளியது குருமூர்த்தமாகிய உருவத்திருமேனியாம். 195. துரியமு மிறந்த சுடரே போற்றி தெரிவரி தாகிய தெளிவே போற்றி! பதப்பொருள் : துரியமும் இறந்த சுடரே - சாக்கிரம் முதலிய நான்கு நிலையும் கடந்த பேரறிவே, போற்றி - வணக்கம், தெரிவு அரிது ஆகிய தெளிவே - அறிதற்கு அருமையாகிய தெளிவே, போற்றி - வணக்கம். விளக்கம் : துரியமும் இறந்த சுடர் - துரியாதீதத்தில் விளங்கும் சுடர். நால்வகை நிலையையும் கடந்த நிலை துரியா தீதமாகும். நால்வகை நிலையாவன சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம் என்பன. உலக அறிவினாலும், உயிர் அறிவினாலும் இறைவனை அறிய முடியாது என்பார், "தெரிவரிதாகிய" என்றும், இறை அறிவினாலே அவனை அறியலாம் என்பார், "தெளிவே" என்றும் கூறினார். பசுஞான பாச ஞானங்களாலே அறிய முடியாத இறைவன், பதி ஞானத்தில் விளங்கித்
|