வேள்வியைக் காணவேண்டுமென்று அழைப்பின்றி உமாதேவியார் வேள்விச் சாலைக்கு வந்தனர்; ஆனால், அவமதிப்புப் பெற்றனர். சிவபெருமான் கோபங்கொண்டு வீரபத்திரரால் தக்கனது தலையையும் அறுத்து, வேள்வியையும் அழிக்கச் செய்தார். தேவர்கள் நஞ்சம் அஞ்சியது : திருப்பாற்கடலில் மந்தர மலையை மத்தாக வைத்து, வாசுகி என்னும் பாம்பை நாணாகக்கொண்டு தேவர் ஒருபுறம் அசுரர் ஒருபுறம் நின்று கடைய ஆரம்பித்தனர். அவ்வாறு கடையும்போது வாசுகி வருத்தம் தாங்காமல் விடத்தைக் கக்கியது. அவ்வாறு எழுந்த விடத்துக்கு அஞ்சி, பிரமன் முதலிய தேவர்கள் சிபபெருமானிடம் சரண் புகுந்தார்கள். சிவபெருமான் விடத்தை யுண்டு தேவர்களைக் காப்பாற்றினார். இதனால், சிவபிரானது முதன்மை கூறப்பட்டது. 4 தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட் டாதிறைஞ்சேன் அவமே பிறந்த அருவினை யேன்உனக் கன்பருள்ளாஞ் சிவமே பெறுந்திரு எய்திற் றிலேன்நின் திருவடிக்காம் பவமே அருளுகண் டாய்அடி யேற்கெம் பரம்பரனே. பதப்பொருள் : எம் பரம்பரனே - எங்கள் மிக மேலான பொருளே, அவமே பிறந்த - வீணாகவே பிறந்த, அருவினையேன் - தொலைத்தற் கரிதாகிய தீவினையுடையேனாகிய நான், தவம் புரிந்திலன் - தவஞ்செய்தி லேன்; முட்டாது - இடைவிடாமல், தண்மலர் இட்டு - குளிர்ந்த மலர்களால் உன்னை அருச்சித்து, இறைஞ்சேன் - வணங்கேன்; உனக்கு அன்பர் உள் ஆம் - உன்னிடத்து அன்பு செய்யும் அடியாரொடு கலத்தலாகிய, சிவமே உன்னிடத்து அன்பு செய்யும் அடியாரொடு கலத்தலாகிய, சிவமே பெறும் திரு - மங்களகரத்தையுடைய செல்வத்தை, எய்திற்றிலேன் - அடைந்திலேன்; அடியேற்கு - இனியாயினும் தொண்டனேனுக்கு, நின் திருவடிக்கு ஆம் பவமே - உன் திருவடிக்காளாதற்குரிய பிறப்பையே, அருள் - நீ அருள் செய்ய வேண்டும். விளக்கம் : தவம் புரிதலாவது, மனம் பொறிவழியே செல்லாது நிற்றற் பொருட்டு, விரதங்களால் உண்டி சுருக்கல், கோடைகாலத்தில் வெயிலில் நிற்றல், மாரிக்காலத்தில் நீரில் நிற்றல் முதலிய செயல்களை மேற்கொண்டு, தமக்கு உண்டாகும் துன்பங்களைப் பொறுத்துப் பிற உயிர்களைக் காத்தல், இவ்வுண்மையை, "உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு" என்ற திருக்குறளால் உணரலாம்.
|