பக்கம் எண் :

திருவாசகம்
132


பொருள்களை உடைமையாகக்கொள்ளும் தன்மையால் ‘உடையான்’ என்றும், தமக்கு உபதேசம் செய்து ஞானத்தந்தையாய் விளங்கினமையால், ‘அத்தன்’ என்றும் கூறினார். உலகத்திலே மதுவை உண்டு மயங்கிப் பேசுவார் போல, சிவானந்தத் தேறலை உண்பாரும் தம் சிந்தனையற்று மயங்கிப் பேசுவார் என்பதைக் குறிப்பிட ‘மால் இவன் என்ன ஒத்தன ஒத்தன சொல்லிட’ என்றார். இவரது நிலையை உணராது ஊரவர் தங்கள் தங்கள் மனத்தில் தோன்றியவாறு பேசுவர் என்பதைக் குறிப்பிடத் ‘தத்தம் மனத்தன பேச’ என்று கூறினார். தம் செயலற்றிருக்கும் நிலையே ‘சாவது’ எனப்பட்டது. அந்நிலை எப்போது வரும் என்பார் ‘எஞ்ஞான்றுகொல் சாவதுவே’ என்றார்.

இதனால், துறவுள்ளமாகிய வைராக்கிய நிலை கூறப்பட்டது.

3

சாவமுன் னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று நஞ்சம்அஞ்சி
ஆவஎந் தாயென் றவிதா இடுநம் மவரவரே
மூவரென் றேயெம் பிரானொடும் எண்ணிவிண் ணாண்டுமண்மேல்
தேவரென் றேஇறு மாந்தென்ன பாவந் திரிதவரே.

பதப்பொருள் : முன்னாள் - முற்காலத்தில், தக்கன் - தக்கன் என்பான், சாவ - இறக்கும்படி, வேள்வித் தகர் தின்று - அவன் இயற்றிய யாகத்தில் அவியாகப் பெய்த ஆட்டின் இறைச்சியைத் தின்றும், நஞ்சம் அஞ்சி - பாற்கடலில் தோன்றிய விடத்துக்கு அஞ்சியும், ஆவ - ஐயோ, எந்தாய் என்று - எமக்குத் தந்தையேயென்று, அவிதா இடும் - முறையிட்ட, நம்மவர் அவரே - நம்மவராகிய அவர்கள்தாமோ, மூவர் என்று எண்ணி - மூவர் என்று எண்ணப்பட்டு, விண் ஆண்டு - தத்தமக்குரிய விண்ணுலகங்களை யாண்டு, மண்மேல் - மண்ணுலகத்திலும் தேவர் என்று - தேவர்கள் என்று சொல்லப்பட்டு, இறுமாந்து - இறுமாப்படைந்து, திரிதவர் - திரிவர், என்ன பாவம் - இது என்ன பாவம்.

விளக்கம் : நஞ்சம் அஞ்சி என்பதனை நஞ்சத்துக்கு அஞ்சி என நான்கனுருபு விரித்துரைத்துக்கொள்க. ஆவ - இரக்கக் குறிப்பு. அவிதாவிடல் - முறையிடுதல். நம்மவரவரே என்பதில் ஈற்றேகாரம் வினா. பிரமனும் விட்டுணுவும் நம் போலச் செத்துப் பிறக்கின்ற தெய்வங்களாதலின், ‘நம்மவர்’ என்றார். மூவரோடும் வைத்து எண்ணப்படுகின்ற உருத்திரன் வேறு.

தக்கன் வேள்வி செய்தது : தக்கன் என்பான் செருக்குற்றுச் சிவபெருமானை ஒழிந்த மற்றைத் தேவர்களை வைத்துக்கொண்டு ஒரு பெரிய வேள்வியைச் செய்தான். தந்தையாகிய தக்கன் செய்த