பக்கம் எண் :

திருவாசகம்
131


அல்லாது - உன்னை நினைத்தலன்றி, பிற தெய்வம் - வேறு தெய்வங்களை, உள்ளேன் - நினையேன்.

விளக்கம் : சிவபதமே முத்தியுலகமாதலாலும், ஏனைய இந்திரன் முதலியோர் பதங்கள் பந்த உலகம் ஆதலாலும், அடிகள், பந்தம் நீங்கி வீடு பெறவே விரும்புகின்றார் ஆதலாலும், ‘கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு’ என்றார். ‘அயன்’ என்பதற்கு, ‘பிறப்பில்லாதவன்’ என்பது பொருள். இஃது உபசாரம். அடியார் இணக்கம் வீடு பேற்றைத் தருவது. அதனால், ‘அடியார் இணக்கமன்றி வேறொன்றையும் விரும்பேன்’ என்பார், ‘அடியாரொடல்லால் நள்ளேன்’ என்றார். திருவருட்பேறுடையார் நரகம் புகார் என்பது தோன்ற, ‘நரகம் புகினும்’ என்றார். திருவருளால் இருக்க நேரின், அதனையும் இகழ மாட்டேன் என்பார். ‘திருவருளாலே இருக்கப் பெறின் எள்ளேன்’ என்றார்.

பிற தெய்வங்கள் உயிர்கள் போலச் செத்துப் பிறக்கக் கூடியன. சிவபெருமான் ஒருவனே பிறப்பு இறப்பைக் கடந்தவன். பிறப்பு இறப்பு இல்லாதவனே பிறப்பையறுக்க இயலும். ஆதலால் பிறப்பையறுக்க விரும்பும் அடிகள், 'பிற தெய்வம் உள்ளேன்' என்றார்.

கருத்து : இறைவனது திருவருளில் உள்ள வேட்கை கூறப்பட்டது.

2

உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்துருகி
மத்த மனத்தொடு மால்இவன் என்ன மனநினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்துஎவரும்
தத்தம் மனத்தன பேசஎஞ் ஞான்றுகொல் சாவதுவே.

பதப்பொருள் : உத்தமன் - தலையாயவனும், அத்தன் - தந்தையும், உடையான் - உடையானும் ஆகிய இறைவனது, அடியே - திருவடியையே, நினைந்து உருகி - எண்ணி உள்ளம் உருகி, இவன் மால் என்ன - இவன் மயக்கமுற்றான் எனப் பிறர் கருதும்படி, மத்த மனத்தொடு - களிப்பேறிய நெஞ்சோடு, ஊர் ஊர் திரிந்து - பல ஊர்களுக்கும் சென்று, மனநினைவில் ஒத்தன ஒத்தன - என் உள்ளக்கருத்தில் பொருந்தின பொருந்தின செய்திகளை, சொல்லிட - யான் பேசவும், எவரும் - இந்நிலையைக் கண்டார் எல்லாரும், தத்தம் மனத்தன பேச - தங்கள் தங்கள் உள்ளத்தில் தோன்றியவற்றைச் சொல்லவும், சாவது - யான் இறக்கப்பெறுவது, எஞ்ஞான்றுகொல் - எந்நாளோ.

விளக்கம் : அறிவுடைய பொருள்களை ஆளும் தன்மையுடைமையால், இறைவனை ‘உத்தமன்’ என்றும், அறிவில்லாப்