நிலைமையை, கண்டு - நோக்கி, கொள் - என்னை ஏற்றுக் கோடல் வேண்டும். விளக்கம் : ‘உள்ளம் வெதும்பி’, ‘பொய் தவிர்ந்து’ என்றமையால் மன வழிபாடும், "போற்றி சய சய போற்றி" என்றமையால் மொழி வழிபாடும், "மெய்யரும்பி, விதிர்விதிர்த்து" என்றமையால் மெய்வழிபாடும் ஆகிய முக்கரண வழிபாடும் கூறப்பட்டன. இந்நிலை இறைவன் ஆட்கொள்ளுதற் கேற்ற நிலைதான் என்பார், ‘கண்டுகொள்’ என்றார். திருநாவுக்கரசரும், "கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன் உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளால் திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூர்அரனே" என்றார். அத்திருவிருத்தத்தில், ‘மனமானது இறைவனது கழலையே நினைக்கிறது; நாவானது அவனது நாமத்தையே கூறுகிறது; மெய்யானது அவனது நீற்றையே கொண்டுள்ளது’ என்று முக்கரண வழிபாடுகளும் கூறப்பட்டன. அவற்றின் பயனாகத் திருநாவுக்கரசரும் அடிகளைப் போன்றே சிவகதியே வேண்டுகிறார். ஆசார்யர்களது திருவாக்குகளின் ஒற்றுமையை நோக்கி மகிழலாம். ‘தான்’ நான்கும் ஈற்றேகாரமும் அசைநிலைகளுமாம். கருத்து : முக்கரணங்களும் இறைவன் பணியில் நின்றமை கூறப்பட்டது. 1 கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும் நள்ளேறன் நினதடி யாரொடல் லால்நர கம்புகினும் எள்ளேன் திருவரு ளாலே யிருக்கப் பெறின்இறைவா உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாதெங்கள் உத்தமனே. பதப்பொருள் : இறைவா - இறைவனே, எங்கள் உத்தமனே - எங்களுக்குத் தலைவனே, புரந்தரன் மால் அயன் வாழ்வு - (சிவலோக வாழ்வைத் தவிர) இந்திரன் திருமால் பிரமன் முதலியோரின் உலகங்களின் வாழ்வையும், கொள்ளேன் - ஒரு பொருளாக என் மனத்தில் கொள்ளேன், குடி கெடினும் - என் குடியே கெடுவதாயினும், நினது அடியாரொடு அல்லால் - உன் தொண்டரோடு கூடுவதன்றி, நள்ளேன் - பிறரோடு நட்புக் கொள்வேன், திருவருளாலே இருக்கப்பெறின் - நின் திருவருளாலே இருக்க நேரின், நரகம் புகினும் - நரகத்தில் புகப்பெறினும், எள்ளேன் - அதனை இகழேன், உன்னை
|