கருணையியாலே என்னைத் தடுத்தாட்கொண்டனன்; அவன் எம்பிரான் என்ன - அவன் எம் தலைவனாகவும், நான் அடியேன் என்ன - நான் அவன் அடியவனாகவும் இருக்கின்ற, இப்பரிசே - இந்தத் தன்மையே, எம்பிரான் தெரியும் பரிசாவது - எம் இறைவன் நினைந்து அருளிய தன்மை ஆதலை, புவன் இயம்புக - உலகம் எடுத்துச் சொல்வதாக. விளக்கம் : உலகத் தோற்றத்துக்கு இடமானவன் என்றதால் ‘பவன்’ என்றார். சரணம் என்றடைந்த சந்திரனுக்கு அஞ்சேல் என்று அருளி முடிமீது இடங்கொடுத்து இரங்கங் காட்டினமையைக் காட்ட ‘பனிமாமதிக் கண்ணி விண்ணோர் பெருமான்’ என்றார். எல்லா உயிர்களுக்கும் இன்பத்தைச் செய்கின்றான் ஆகையால், ‘சிவன் எம்பிரான்’ என்றார். உலகத்தைத் தோற்றியும், உயிர்களுக்குரிய துன்பத்தைப் போக்கியும், அவைகளுக்கு இன்பத்தைக் கொடுத்தும் அருள்புரிகின்ற தன்மைகளை உடையனாதலால், சிற்றறிவும் சிறு செயலுமுடைய உயிராகிய தம்மையும் ஆண்டுகொண்டருளினான் இறைவன் என்பார், ‘ஆண்டுகொண்டான் என் சிறுமை கண்டும்’ என்றார். ஆட்கொண்டமையால் ஆண்டான் என்றும், ஆட்பட்டமையால் அடிமையென்றும் கூறப்படும் ஆண்டான் அடிமைத் திறம் தோன்ற ‘அவன் எம்பிரான் நான் அடியேன்’ என்ற உண்மையும் கூறினார். தம்மை ஆட்கொண்டமையால் வள்ளல் என்ற கருத்துப்படப் பின்னரும் ‘எம்பிரான்’ என்றார். இறைவனுக்கும் உயிர்களுக்குமுரிய ஆண்டான் அடிமை முறைபற்றி அவனது அருள் திறத்தை உலகவர் எடுத்துக் கூற வேண்டும் என்பார், ‘எம்பிரான் தெரியும் பரிசாவது இயம்புகவே’ என்றார். ‘புவனம்’ என்பது கடைகுறைந்து ‘புவன்’ என நின்றது. இறைவன் பிறையை அணிந்தது : தக்கன் என்பான் அசுவினி முதலிய தன் இருபத்தேழு பெண்களையும் சந்திரனுக்கு மணம்செய்து கொடுத்தான். ஆனால், சந்திரன் அவர்களுள் ஒருத்தியாகிய உரோகிணியினிடத்து மட்டும் மிகவும் அன்பு செலுத்திவந்தான். இதனை யறிந்த தக்கன் கோபங்கொண்டு, ‘தன் கலைகள் குறைந்து சந்திரன் அழிந்து போகக்கடவன்!’ எனச் சபித்தான். சந்திரனின் பதினைந்து கலைகளும் தேயவே, சிவபெருமானிடம் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று அடைக்கலம் புகுந்தான். அப்பெருமான் இரங்கி ஒற்றைக்கலையோடு கூடிய சந்திரனைத் தன் முடிமீது அணிந்து சந்திரனுக்கு அருள் புரிந்தான். இதனால், இறைவன் உயிர்களைக் கருணையினால் ஆட்கொள்கிறான் என்பதும், அவ்வாறு ஆட்கொண்டபோதும்
|