பக்கம் எண் :

திருவாசகம்
138


அவன் ஆண்டவனாகவும் உயிர்கள் அடிமையாகவும் இருக்கின்றனர் என்பதும் கூறப்பட்டன.

9

புகவே தகேன்உனக் கன்பருள் யானென்பொல் லாமணியே
தகவே யெனையுனக் காட்கொண்ட தன்மையெப் புன்மையரை
மிகவே உயர்த்திவிண் ணோரைப் பணித்திஅண் ணாஅமுதே
நகவே தகும்எம் பிரான்என்னை நீசெய்த நாடகமே.

பதப்பொருள் : என் பொல்லா மணியே - துளையிடப்படாத என் மாணிக்கமே, யான் - நான், உனக்கு அன்பர் உள் - உன்னிடத்து அன்பு செய்வாராகிய அடியார் நடுவே, புகவே தகேன் - நுழையவே தகுதி யில்லேன்; என்னை - அத்தன்மையனாகிய என்னை, உனக்கு ஆட்கொண்ட தன்மை - உனக்கு அடிமைகொண்ட தன்மை, தகவே - தகுதியோ? எப்புன்மையரை - எத்தகைய கீழ்ப்பட்டோரையும், மிகவே உயர்த்தி - மேலாக உயர்வித்து, விண்ணோரைப் பணித்தி - மேலான வானவரை அவருக்குக் கீழ்ப்படுத்துகிறாய்; அண்ணா - அப்பனே, அமுதே - அமுதனே, எம்பிரான் - எப்பெருமானே, என்னை நீ செய்த நாடகம் - என்னை நீ இவ்வாறு செய்த அருட்கூத்து, நகவே தகும் - நகைத்தற்கே தகுதியாயிருக்கின்றது.

விளக்கம் : பொள்ளா மணி என்பது பொல்லா மணி என மருவி வந்தது. பொள்ளல் - துளையிடல். தகவே என்றதில் உள்ள ஏகாரம் வினாப்பொருளில் வந்து, தகுதியன்று என்ற பொருளைத் தந்தது. அன்பருக் குரிய தகுதி ஒரு சிறிதும் இல்லாத தன்மை ஆட்கொண்டது வியத்தகு செயல் என்பார். ‘நகவே தகும்’ என்றார். உயர்ந்தோரைத் தாழ்த்தலும், தாழ்ந்தோரை உயர்த்தலும் இறைவன் செய்யும் விளையாட்டு என்பர், ‘நீ செய்த நாடகமே’ என்றார்.

இதனால், உலகியலில் தாழ்ந்தும் அருளியலில் நிற்பவரை உயர்த்தலும், உலகியலில் உயர்ந்தும் அருளியலில் நில்லாதவரைத் தாழ்த்தலுமாகிய வியத்தகு செயல் பரம்பொருளாகிய சிவத்துக்கு உண்டு என்பது கூறப்பட்டது.

10

2. அறிவுறுத்தல்

அஃதாவது, உலகியற்பொருளிற்செல்லும் மனத்துக்கு உண்மைப் பொருளை நாட வேண்டுமென அறிவுறுத்தலாம்.

தரவு கொச்சகக் கலிப்பா

நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நானடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே.