பக்கம் எண் :

திருவாசகம்
19



சிவமயம்
திருச்சிற்றம்பலம்

தமிழ் வேதமாகிய திருவாசகம் - மூலமும் உரையும்

நூற்சிறப்பு

தொல்லை யிரும்பிறவிச் சூழுந் தளைநீக்கி
அல்லலறுத் தானந்த மாக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூ ரெங்கோன்
திருவா சகமென்னுந் தேன்.

பதப்பொருள்: எல்லை மருவா - முடிவை அடையாத, நெறி - வீட்டு நெறியை, அளிக்கும் - கொடுக்கின்ற, வாதவூர் எம்கோன் - திருவாத வூரின்கண் அவதரித்த எம் தலைவராகிய மாணிக்கவாசக சுவாமிகளது திருவாய் மலரில் தோன்றிய, திருவாசகம் என்னும் தேன் - திருவாசகம் என்கின்ற தேனானது; தொல்லை - பழமையாகிய, இரு - பெரிய, சூழும் - உயிரைச் சூழ்ந்துள்ள, பிறவித்தளை - பிறவியாகிய கட்டினை, நீக்கி - அகற்றி, அல்லல் - துன்பத்தை, அறுத்து - ஒழித்து, ஆனந்தம் ஆக்கியது - எமக்குப் பேரின்பத்தை உண்டாக்கியது.

விளக்கம் : தேன், உடல் நோயை நீக்கி, உலகின்பத்தைக் கொடுக்கக் கூடியது; திருவாசகம் உயிர் நோயாகிய பிறவியை நீக்கி, வீட்டின்பத்தைக் கொடுக்கக்கூடியது; ஆகையால், திருவாசகத்தைத் தேனாக உருவகம் செய்தார்; தேனின் சிறப்பு அது உண்டாகிய இடத்தைப் பொறுத்தது. திருவாசகம் மணிவாசகரது திருவாய் மலரில் தோன்றியமையால் மிக்க சிறப்புடையது என்பார், "எல்லைமருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்" என்றார். இதனால், ஆக்கியோரது சிறப்பும், நூற்சிறப்பும் கூறப்பட்டன.

இச்சிறப்புப்பாயிரம், திருவாசகத்தை ஓதி உணர்ந்து பயன்பெற்ற பெரியார் ஒருவரால் இயற்றப்பெற்றது என்பது, "அல்லலறுத்து ஆனந்தமாக்கியதே" என்றதனால் உணரலாகும்.