1. சிவபுராணம் (திருப்பெருந்துறையில் அருளிச்செய்யப்பட்டது) சிவனது அநாதி முறைமையான பழமை கலி வெண்பா திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க 5. ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க 10. சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி 15. சீரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால் அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை 20. முந்தை வினைமுழுதும் ஓய வுரைப்பனியான்
|