உன்னுடைய திருவடிக்கு, அன்பன் ஆக்கினாய் - அன்புடையனாகச் செய்தனை; நின் கருணை - உன்னுடைய திருவருளுக்கு, எல்லை இல்லை - ஓர் அளவு இல்லை; நான் ஏது கொண்டு - நான் எதனைக் கருவியாகக்கொண்டு, ஏது செய்யினும் - எத்தீய செயலைச் செய்தாலும், இன்னும் - இனியும், உன் கழல் - உன்னுடைய திருவடியை, எனக்குக் காட்டி மீட்கவும் வல்லையே - எனக்குக் காட்டி மீள ஆட்கொள்ளவும் நீ ஆற்றலுடையவனே, (ஆதலால், அவ்வாறு செய்தல் வேண்டும்). விளக்கம் : ஏலம் - மயிர்ச்சாந்து. ஏலும் - பொருந்தும். 'அன்பது' என்பதில் 'அது' பகுதிப்பொருள் விகுதி. விச்சை - வித்தை. அஃதாவது, இயற்கைக்கு மாறான அதிசயச் செயல்களைச் செய்வது. கல் வன்மையுடையது; கனி மென்மையுடையது. கல்லை மென்கனியாக்கினால் அஃது ஒரு வித்தையேயாகும். அதைப் போல, வன்மையான மனத்தை நெகிழ்வித்து நின்தாளிணைக்கு அன்பனாக்கியது பெரிய வித்தை என்பார், 'விச்சைகொண்டு என்னை நின் கழற்கு அன்பனாக்கினாய்' என்றார். மாயை வித்தைக்காரனாதலால், எத்தொழிலைச் செய்து ஏது அவத்தைப்பட்டாலும், அத்தொழிலை அவன் தொழிலாகக் கொண்டு திருவடி இன்பத்தை மீண்டும் நல்க ஆற்றலுடையான் என்பார், 'உன் கழல் காட்டி மீட்கவும் வல்லையே' என்றார். இதனால், பசு கரணத்தைப் பதி கரணமாக மாற்றித் திருவடி இன்பத்தை நல்கும் ஆற்றலுடையவன் இறைவன் என்பது கூறப்பட்டது. 94 வான நாடரும் அறியொ ணாதநீ மறையி லீறும்முன் தொடரோ ணாதநீ ஏனை நாடரும் தெரியொ ணாதநீ என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா ஊனை நாடகம் ஆடு வித்தவா உருகி நான்உனைப் பருக வைத்தவா ஞான நாடகம் ஆடு வித்தவா நைய வையகத் துடைய விச்சையே. பதப்பொருள் : வான நாடரும் - விண்ணுலகத்தாரும், அறியொணாத நீ - அறியவொண்ணாத நீ, மறையில் - வேதத்தில், ஈறும் - முடிவாய் உள்ள பகுதியும், முன் - தொன்மையாகவே, தொடர் ஒணாத நீ - தொடர்ந்து பற்ற முடியாத நீ, ஏனை நாடரும் - விண்ணுலகொழிந்த பிற உலகத்தாரும், தெரியொணாத நீ - அறியவொண்ணாத நீ, என்னை - அடியேனை, இன்னிதாய் - இனிதாக, ஆண்டு கொண்ட ஆ - ஆண்டுகொண்ட வண்ணமும், ஊனை நாடகம் ஆடுவித்த ஆ - இந்த உடம்பை
|