பக்கம் எண் :

திருவாசகம்
211


நாடகமாட்டின வண்ணமும், நான் உருகி - நான் மனமுருகி, உனைப் பருகவைத்த ஆ - உன்னை நுகரும்படி செய்த வண்ணமும், ஞான நாடகம் ஆடுவித்த ஆ - ஞான நாடகம் ஆடச் செய்த வண்ணமும் மிகவும் நல்லன; (இனி), வையகத்துடைய இச்சை - உலகத்தில் நான் கொண்டுள்ள ஆசை, நைய - ஒழிவதாக.

விளக்கம் : இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட அடியார் முதற்கண் உடல் புளகாங்கிதம் அடைவாராதலின், 'ஊனை நாடகம் ஆடுவித்தவர்' என்றார். அடுத்து, உள்ளம் உருகி இறை இன்பத்தினை நுகர்வாராகையால் 'உருகி நான் உனைப் பருக வைத்தவா' என்றார். இன்ப நுகர்ச்சியால் ஆனந்தக்கூத்து ஆடுவாராதலால், 'ஞான நாடகம் ஆடுவித்தவா' என்றார். இவற்றை முறையே அனந்தத் தழுந்தல், ஆனந்தப் பரவசம், ஆனந்தாதீதம் என்றும் கூறலாம். இத்துணையும், பயன் தருவது உலகப் பற்று முற்றும் நீங்கிய பொழுதேயாதலின், 'வையகத்துடைய இச்சை நைய' என்றார்.

இதனால், இறை அனுபவத்தின்படி நிலைகள் கூறப்பட்டன.

95

விச்ச தின்றியே விளைவு செய்குவாய்
விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய் வஞ்ச கப்பெரும்
புலைய னேனைஉன் கோயில் வாயிலிற்
பிச்சன் ஆக்கினாய் பெரிய அன்பருக்
குரியன் ஆக்கினாய் தாம்வ ளர்த்ததோர்
நச்சு மாமரம் ஆயி னுங்கொலார்
நானும் அங்ஙனே உடைய நாதனே.

பதப்பொருள் : விண்ணும் - விண்ணுலகத்தையும், மண் அகம் முழுதும் - மண்ணுலகம் முழுதையும், யாவையும் - பிற எல்லாவற்றையும், விச்சு இன்றியே - வித்து இல்லாமலே, விளைவு செய்குவாய் - படைப்பாய், வைச்சு வாங்குவாய் - காத்து அழிப்பாய், வஞ்சகம் - வஞ்சகத்தையுடைய, பெரும்புலையனேனை - பெரிய புலையனாகிய என்னை, உன் கோயில் வாயிலில் - உன் திருக்கோயில் வாசலில் திரிகின்ற, பிச்சன் ஆக்கினாய் - பேரன்பினராகிய உன்னடியார்க்கு உரியனாகச் செய்தாய், தாம் வளர்த்தது - மக்கள் தாம் நட்டு வளர்த்தது, ஓர் - ஒரு, மா - பெரிய, நச்சுமரம் ஆயினும் - விடத்தன்மையுடைய மரமேயானாலும், கொல்லார் - அதனை அழிக்க மாட்டார்கள்; உடைய நாதனே - என்னை அடிமையாகவுடைய இறைவனே, நானும் அங்ஙனே - நானும் உனக்கு அப்படிப் பட்டவனே.