மறுத்தனன் யானுன் அருளறி யாமையில் என்மணியே வெறுத்தெனை நீவிட் டிடுதிகண் டாய்வினை யின்தொகுதி ஒறுத்தெனை ஆண்டுகொள் உத்தர கோசமங் கைக்கரசே பொறுப்பரன் றேபெரி யோர்சிறு நாய்கள்தாம் பொய்யினையே. பதப்பொருள் : என் மணியே - என் மாணிக்கமே, உத்தரகோச மங்கைக்கு - திருவுத்தரகோச மங்கைக்கு, அரசே - தலைவனே, யான் - நான், உன் அருள் - உள் திருவருளின் பெருமையை, அறியாமையில் - அறியாமையால், மறுத்தனன் - அதனை வேண்டாவென்று மறுத்தேன்; நீ எனை வெறுத்து - நீ அதற்காக அடியேனை வெறுத்து, விட்டிடுதி - விட்டுவிடுவாயோ? பெரியோர் - மேலோர், சிறு நாய்கள்தம் பொய்யினை - சிறிய நாய்போல்வாரது குற்றத்தை, பொறுப்பர் அன்றே - மன்னிப்பார்கள் அல்லவா? (ஆதலால்) வினையின் தொகுதி ஒறுத்து - என்னுடைய வினை அனைத்தையும் அழித்து, எனை ஆண்டுகொள் - என்னை ஆண்டுகொண்டு அருள வேண்டும். விளக்கம் : அறியாமை - அஞ்ஞானம்; ஆணவம் என்றும் கூறலாம். ஆணவ மலச்சேர்க்கையால் திருவருட்பெருமை அறியவில்லை என்பார், 'மறுத்தனன் யானுன் அருளறி யாமையில்' என்றார். வினையின் தொகுதி, பல பிறவிகளில் செய்த வினைகளின் ஈட்டம்; சஞ்சிதம் எனப்படும். நெருப்பில் படும் விறகுக் கட்டு அழிவது போல, இறைவன் திரு முன் வினைக்கட்டு அழியும். அவ்வாறு வினைக்கட்டு அழிய வேண்டும் என்று விரும்புவார், 'வினையின் தொகுதி ஒறுத்தெனை ஆண்டுகொள்' என்றார். "விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவை யொன்றும் இல்லையாம் பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே" என்ற திருநாவுக்கரசர் திருவாக்கினை இங்கு நினைவுகூர்க. இதனால், வினைத்தொகுதிகள் யாவும் இறைவன் திருவருளால் அழியும் என்பது கூறப்பட்டது. 6 பொய்யவ னேனைப் பொருளென ஆண்டொன்று பொத்திக்கொண்ட மெய்யவ னேவிட் டிடுதிகண் டாய்விட முண்மிடற்று மையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே செய்யவ னேசிவ னேசிறி யேன்பவம் தீர்ப்பவனே. பதப்பொருள் : விடம் உண் மிடற்று - நஞ்சுண்ட கண்டத்தில், மையவனே - கருமையுடையவனே, மன்னும் - நிலை பெற்ற, உத்தரகோச மங்கைக்கு - திருவுத்தர கோச மங்கைக்கு,
|