வளர்ந்து கொண்டிருக்கிற, நின் - உனது, கருணைக் கையில் - அருட்கரத்தால், வாங்கவும் - வளைத்துப் பிடிக்கவும், நீங்கி - விலகி, இப்பால் - இவ்வுலக வாழ்விலே, மிளிர்கின்ற என்னை - புரளுகின்ற என்னை, விடுதி - விட்டுவிடுவாயோ! விளக்கம் : முடியில் அணிந்திருக்கும் பிறை இறைவனது அருள் திறத்தைக் காட்ட வல்லது. தெளிகின்ற பொன்னாவது, உருக்கி எடுத்த மாற்று மிகுந்த பொன்னாம். மிகுந்த ஒளியுடைமை பற்றிப் பொன்னோடு மின்னலையும் உவமையாகக் கூறினார். கருணைக்கு எல்லையில்லையாதலின், 'வளர்கின்ற கருணை' என்றார். உலக இன்பத்தில் அழுந்துகின்றேன் என்பார், 'மிளிர்கின்ற என்னை' என்றார். மிளிர்தல் - பிறழ்தல். இதனால், இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவர் உலக இன்பத்தை விரும்பலாகாது என்பது கூறப்பட்டது. 4 செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின்மொழி யாரிற்பன்னாள் விழுகின்ற என்னை விடுதிகண் டாய்வெறி வாயறுகால் விழுகின்ற பூமுடி உத்தர கோசமங் கைக்கரசே வழிநின்று நின்னரு ளாரமு தூட்ட மறுத்தனனே. பதப்பொருள் : வெறி வாய் - தேன் பொருந்திய வாயினையுடைய, அறுகால் - வண்டுகள், உழுகின்ற பூ - கிண்டுகின்ற மலரை அணிந்த, முடி - திருமுடியையுடைய, உத்தரகோச மங்கைக்கு - திருவுத்தரகோச மங்கைக்கு, அரசே - தலைவனே, வழிநின்று - வழியில் மறித்து நின்று, நின் அருள் - உன் அருளாகிய, ஆர் அமுது - அரிய அமுதத்தை, ஊட்ட - நீ உண்பிக்க, மறுத்தனன் - மறுத்தேனாகிய, செழிகின்ற - வளர்கின்ற, தீ - விளக்குத் தீயில், புகு - விழுகின்ற, விட்டிலின் - விட்டிற்பூச்சியைப் போல, சில் மொழியாரில் - சிலவாகிய மொழிகளையுடைய மகளிரிடத்து, பல்நாள் - பல நாளும், விழுகின்ற - விருப்பங்கொள்கின்ற, என்னை - அடியேனை, விடுதி- விட்டுவிடுவாயோ! விளக்கம் : ஆறுகால் உடைமையின் வண்டு அறுகால் எனப் பெயர் பெற்றது. விட்டிற்பூச்சி விளக்கின் தோற்றத்தைக் கண்டு மயங்கி அதில் விழுந்து மடியும்; அதைப் போலக் காமுகர் மாதரார் தோற்றத்தைக் கண்டு மயங்கி அவர்பால் விழுந்து கெடுவார். விட்டிற்பூச்சி விளக்கொளியின் வெப்பத்தை அறியாது; அதைப் போல, மாதரின்பத்தின் தீமையை அறியாது விழுகின்றேன் என்பார், 'தீப்புகு விட்டிலிற் சின்மொழியாரிற் பன்னாள் விழுகின்ற என்னை' என்றார். இதனால், மகளிர் இன்பம் இறையின்பத்தையும் மறக்கச் செய்யும் கொடுமையுடையது என்பது கூறப்பட்டது. 5
|