பக்கம் எண் :

திருவாசகம்
249


முடியாதவராய், 'பச்சூன் வீடிற்றி லேனை' என்று ஊனுடம்பைத் தொலைக்க விரும்புகிறார். தேடுதல், ஓடுதல் முதலியன பிரிவுத் துன்பம் அனுபவிப்போர் செயல்களாம். அவையும் செய்ய முடியாதபோது மனமாவது கசிந்து உருக வேண்டும். அக்கனிவும் இல்லை என்று கூறுவார், 'கிடந்துள்ளுருகேன்' என்றார். இவ்வாறிருப்பினும் துன்பம் உறுகின்றேன் என்பார், 'நின்றுழைத்தனனே' என்றார்.

இதனால், பாடுதல், வணங்குதல், உருகுதல் முதலியன இறைவனை அடைதற்குரிய அன்பர்களது செயல் என்பது கூறப்பட்டது.

45

உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத் தீயினொப்பாய்
விழைதரு வேனை விடுதிகண் டாய்விடின் வேலைநஞ்சுண்
மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன்
பழைதரு மாபரன் என்றென் றறைவன் பழிப்பினையே.

பதப்பொருள் : உழைதரு நோக்கியர் - மான் போன்ற பார்வையுடைய பெண்டிரது, கொங்கை - கொங்கையின்கண், பலாப்பழத்து - பலாக்கனியில் மொய்க்கும், ஈயின் ஒப்பாய் - ஈயை ஒத்து, விழை தருவேனை - விரும்புகின்ற என்னை, விடுதி - விட்டுவிடுவாயோ? விடின் - விட்டுவிடுவாயாயின், வேலை நஞ்சு உண் - கடல் விடமுண்ட, மழைதரு கண்டன் - மேகம் போன்ற கருமையான கழுத்தையுடையவன், குணம் இலி - குணம் இல்லாதவன், மானிடன் - மனிதன், தேய் மதியன் - குறைந்த அறிவுடையவன்; பழை தரு மாபரன் - பழைய பெரிய பரதேசி, என்று என்று - அடிக்கடி, பழிப்பினை - உன் இகழ்ச்சியை, அறைவன் - எடுத்துச் சொல்வேன்.

விளக்கம் : மானைப் போன்ற மருண்ட பார்வையுடையவராதலின் பெண்டிரை, 'உழைதரு நோக்கியர்' என்றார். ஈ, பலாப்பழத்தில் மொய்த்து மீள முடியாதது போல, யானும் மாதராரது கொங்கையில் விருப்பம் வைத்து மீள முடியாதிருக்கின்றேன் என்பார், 'கொங்கைப் பலாப்பழத் தீயினொப்பாய் விழைதரு வேனை' என்றார்.

மழைதரு கண்டன் முதலியன நிந்தாஸ்துதி (பழிப்பது போலப் புகழ்வது). பழிப்புப் பொருள் முன் சொல்லப்பட்டது. புகழ்ப் பொருள் பின் வருமாறு:

மழைதரு கண்டன் நீலகண்டன். இது கருணையைக் காட்டுகிறது. குணமிலி என்பது, முக்குணங்களையும் கடந்தவன் என்பதைக் காட்டும். மானிடன் என்பது, மானை இடக்கையில் உடையவன் என்றபடி. இது, இறைவனது ஆற்றலைத் தெரிவிக்கும். தேய்மதியன் - பிறையைத் தரித்தவன்; இஃது அநுக்கிரக சத்தியைக் காட்டுகிறது. மாபரன் என்பது முழுமுதல் தன்மையைக் காட்டும்.