பக்கம் எண் :

திருவாசகம்
291


பதப்பொருள் : மூவர்க்கும் முன்னானை - மும்மூர்த்திகளுக்கும் முற்பட்டவனும், முற்றும் ஆய் - முழுதுமாகி, முற்றுக்கும் - முழுதுக்கும், பின்னானை - பிற்பட்டவனும், பிஞ்ஞகனை - தலைக்கோலமுடையவனும், பேணு பெருந்துறையில் - யாவரும் விரும்புகிற திருப்பெருந்துறையில், மன்னானை - நிலைபெற்றவனும், வானவனை - தேவனும், மாது இயலும் பாதியனை - உமாதேவியார் பொருந்திய பாகத்தையுடையனும், தென் ஆனைக்காவானை - தென் திருவானைக் காவில் உறைபவனும், தென்பாண்டி நாட்டானை - தென்பாண்டி நாட்டையுடையவனும், என் ஆனை என் அப்பன் என்பார்கட்கு - என் பெருந்துணைவன் என் தந்தை என்பவர் களுக்கு, இன் அமுதை அன்னானை - இனிய அமுதம் போல்பவனும், அம்மானை - எம் தந்தையும் ஆகிய இறைவனது புகழை, அம்மானாய் - அம்மானைப் பாட்டாக, பாடுதும் - பாடுவோமாக.

விளக்கம் : அயன் அரி அரன் என்பார் மூவர் ஆவர்; முற்றுமாய் என்றது, எல்லாப் பொருள்களிலும் கலந்திருக்கும் தன்மையைக் குறிப்பது. பிஞ்ஞகன் என்றது, பிறை சடை முதலிய சடைக்கோலத்தை. திருஆனைக்கா என்ற ஊர் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ளது.

இதனால், இறைவன் அன்பர்கட்கு இன்னமுதாய் இருப்பான் என்பது கூறப்பட்டது.

19

பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான்
கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார்
குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச்
சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே
பற்றிஇப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான்
பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய்.

பதப்பொருள் : பெற்றி - தன் தன்மை, பிறர்க்கு அரிய - பிறர் ஒருவர்க்கும் அறிவதற்கு அருமையான, பெம்மான் - பெருமானும், பெருந்துறையான் - திருப்பெருந்துறையில் இருப்பவனும், கொற்றக் குதிரையின்மேல் வந்தருளி - வெற்றியையுடைய குதிரையின்மேல் எழுந்தருளி வந்து, தன் அடியார் குற்றங்கள் நீக்கி - தன்னடியவரது குற்றங்களைப் போக்கி, குணம் கொண்டு - குணத்தை ஏற்று, கோதாட்டி - சீராட்டி, சுற்றிய - சூழ்ந்திருக்கிற, சுற்றத் தொடர்பு - குடும்பத் தொடர்புகளை, அறுப்பான் - தொலைப்பவனும் ஆகிய இறைவனது, தொல்புகழே பற்றி - பழமையாகிய புகழையே துணையாகப் பற்றி, இப்பாசத்தைப் பற்றற - இந்த வினைக்கட்டினைப் பொருந்துதல் நீங்கி, நாம் பற்றுவான் - அவனையே நாம் அடையும்பொருட்டு, பற்றிய - நாம் பெற்ற,