பக்கம் எண் :

திருவாசகம்
292


பேரானந்தம் - பெரிய இன்பத்தினது சிறப்பை, அம்மானாய் - அம்மானைப் பாட்டாக, பாடுதும் - பாடுவோமாக.

விளக்கம் : இன்ன தன்மையன் என்று அறியவொண்ணாத தேவனாதலின், ‘பெற்றி பிறர்க்கரிய பெம்மான்’ என்றார். ‘இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே’ என்ற திருநாவுக்கரசர் வாக்கையும் காண்க. குதிரையின்மேல் எழுந்தருளி வந்து அடிகளுக்கும் பாண்டியனுக்கும் அருள் செய்த வரலாறு முன்னர்க் கூறப்பட்டது. இறைவனது பற்றைப் பற்றினால்தான் உலகப்பற்றுகள் நீங்குமாதலின், ‘தொடர்வறுப்பான் தொல்புகழே பற்றியிப் பாசத்தைப் பற்றற’ என்றார். ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ என்ற நாயனார் வாக்கையும் காண்க. பாசம் அற்ற பின்பு இறைவனிடத் திலிருந்து நீங்காதிருக்கச் செய்வது அவனது திருவடி இன்பம் என்பார். ‘நாம் பற்றுவான் பற்றிய பேரானந்தம்’ என்றார்.

இதனால், பாசப்பற்று அற்றவர்க்கே இறைவன் இன்பம் உண்டாகும் என்பது கூறப்பட்டது.

20

திருச்சிற்றம்பலம்