இயைந்தன முப்புரம் எய்தல்பாடி ஏழை அடியோமை ஆண்டுகொண்ட நயந்தனைப் பாடிநின் றாடியாடி நாதற்குச் சுண்ணம் இடித்தும்நாமே. பதப்பொருள் : அயன் தலை கொண்டு - (சிவபெருமான்) பிரமம் தலையைக் கொய்து, செண்டு ஆடல் பாடி - பந்தாடினமையைப் பாடி, அருக்கன் எயிறு - சூரியனது பல்லை, பறித்தல் பாடி - தகர்த்தமையைப் பாடி, கயந்தனைக் கொன்று - யானையைக் கொன்று, உரி போர்த்தல் பாடி - அதன் தோலைப் போர்த்துக்கொண்டமையைப் பாடி, காலனை - இயமனை, காலால் உதைத்தல் பாடி - திருவடியால் உதைத்தமையைப் பாடி, இயைந்தன முப்புரம் - ஒருங்கே உலவிய திரிபுரங்களை, எய்தல் பாடி - அம்பால் எய்து அழித்தமையைப் பாடி, ஏழை அடியோமை - சிற்றறிவும் சிறு தொழிலு முடைய எங்களை, ஆண்டுகொண்ட - ஆட்கொண்ட, நயந்தனைப் பாடி - நன்மையினைப் பாடி, நின்று ஆடி ஆடி - பாடலுக்கேற்ப நின்று தொடர்ந்து ஆடி, நாதற்கு - இறைவனுக்கு, சுண்ணம் - வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம். விளக்கம் : அயன் தலை கொண்டு செண்டாடியது : தன்னைப் பிரமம் என்று அகங்கரித்த பிரமனுடைய செருக்கடங்கும் பொருட்டு இறைவன் வைரவ மூர்த்தியை உண்டாக்கினான். அவ்வைரவ மூர்த்தியைக் கண்டு பிரமனுடைய நடுச்சிரம் நகைக்க, வைரவர் அதனைக் கொய்து பிரமனது செருக்கை அடக்கினார். இதனால், இறைவனது மறக்கருணை கூறப்பட்டது. 18 வட்ட மலர்க்கொன்றை மாலைபாடி மத்தமும் பாடி மதியும்பாடிச் சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச் சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடிக் கட்டிய மாசுணக் கச்சைபாடிக் கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல் இட்டுநின் றாடும் அரவம்பாடி ஈசற்குச் சுண்ணம் இடித்துநாமே. பதப்பொருள் : வட்டம் - சிவபெருமானது வட்ட வடிவாகிய, கொன்றை மலர் மாலை பாடி - கொன்றை மலர் மாலையைப் பாடி, மத்தமும் பாடி - ஊமத்த மலரையும் பாடி, மதியும் பாடி - பிறையையும் பாடி, சிட்டர்கள் வாழும் - பெரியோர் வாழ்கின்ற, தென் தில்லை பாடி - அழகிய தில்லை நகரைப் பாடி,
|